91
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 (Sukhoi-30) ரக போர் விமானம் ஒன்று அசாம் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக ஜோர்ஹட் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை மேலெழுந்த சுகோய் விமானம் இரவு 7.42 மணியளவில் திடீரென ரேடாரிலிருந்து மறைந்ததுடன், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.
விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையின் விசேட குழுக்கள் உடனடியாக ஆய்வுகளை ஆரம்பித்தன. முதற்கட்டத் தகவல்களின்படி, கர்பி ஆங்லாங் பகுதியில் அந்த விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டறியவும், விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை குறித்து அறியவும் இந்திய விமானப்படை தொடர்ந்து தீவிர தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. வானிலை மற்றும் புவியியல் சவால்களுக்கு மத்தியிலும் மீட்புக் குழுவினர் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
#Sukhoi30Crash #IndianAirForce #AssamAccident #MissingJet #KarbiAnglong
