இந்த பேரிடரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது பொறுத்தமற்றது

 
தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பிற்கு சவால் விடுக்கின்றோம். இந்த பேரிடரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது பொறுத்தமற்றது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களுக்கமைய மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவில்லை. சில பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பு படையினரால் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். எவ்வாறிருப்பினும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் உயிர் முன்னாயத்தங்களாலேயே பாதுகாக்கப்பட்டது.

எமது வளிமண்டலவியல் திணைக்களம் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அதனை அவதானித்து, அதன் தாக்கம் கடற்பிராந்தியத்திலேயே அதிகமாகக் காணப்படும் என எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை பின்பற்றியமையால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடிந்தது. 25ஆம் திகதியின் பின்னரே மூன்றாவது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஓரளவு முன்னாயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.

27ஆம் திகதி காலை வேளையின் பின்னரே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று சூறாவளியாக மாற்றமடைந்தது. அதன் பின்னரே அது ‘தித்வா’ எனப் பெயரிடப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என அனைத்தும் தமது கடமைகளை சரிவர செய்துள்ளன. எவ்வாறிருப்பினும் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்காக எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த ஒரு புயலால் 1242 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே இந்தளவு எண்ணிக்கையிலான மண்சரிவுகள் ஒருபோதும் பதிவாகவில்லை. உயிரிழப்புக்களை தடுக்க முடியாது போனமைக்கு இதுவே காரணமாகும். எனவே இந்த சம்பவத்தை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது:

நன்றி

Leave a Reply