மும்பை: மும்பையைச் சேர்ந்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி சம்ரிதி இலந்தோலி, தனது வீட்டுச் சமையலறையை ஒரு லாபகரமான பேக்கரி தொழில் கூடமாக மாற்றி, வெறும் 6 மாதங்களுக்குள் ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சட்டப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவியான சம்ரிதிக்கு, சமையலிலும், குறிப்பாக பேக்கிங்கிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் ‘லா ஜோய்’ (La Joie) என்ற பெயரில் தனது வீட்டிலேயே ஒரு பேக்கரியைத் தொடங்கினார்.
ஆரம்ப காலகட்டத்தில், சம்ரிதி தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக மட்டுமே பொம்போலோனி (Bomboloni), ப்ரூக்கிகள் (Brookies), டீ கேக்குகள் மற்றும் ப்ரவுனிகள் போன்ற இனிப்புகளைத் தயாரித்து வந்தார். அவருடைய இனிப்புகளுக்குக் கிடைத்த அதீத வரவேற்பு, இதை ஒரு பெரிய வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
இந்த இளம் தொழில்முனைவோர், சோசியல் மீடியாக்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். அவர் விளம்பரங்களுக்குப் பணம் செலவழிக்காமல், தனது இனிப்புகள் தயாரிக்கும் விதத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாகப் பதிவு செய்து பகிர ஆரம்பித்தார்.
சுவையாகவும், கவரும் வகையிலும் இருந்த அவரது வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி, வைரலாகின. பார்வைகள் அதிகரிக்க அதிகரிக்க, ஆர்டர்களும் தொடர்ந்து குவியத் தொடங்கின. இதன் விளைவாக, அவர் தனது தொழிலைத் தொடங்கி 6 மாதங்களுக்குள் சுமார் 450-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து, ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்.
சம்ரிதி தொழில்முனைவோராக மாறியது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆரம்ப முதலீடுகளைத் தவிர்ப்பதற்காக, அவர் தனது தாய் வீட்டில் வைத்திருந்த பேக்கிங் கருவிகளைப் பயன்படுத்தியது உதவியது. மேலும், சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயையும் அவர் மீண்டும் தொழிலில் முதலீடு செய்ததன் மூலம், ‘லா ஜோய்’ நிறுவனம் விரைவில் வளர்ந்தது.
ஆனால், டெலிவரி செலவுகள் சில சமயம் இனிப்பின் விலையை விடக் கூடுதலாக இருப்பது, மற்றும் உணவுப் பொருட்களை வாடிக்கையாளரிடம் சரியாகக் கொண்டு சேர்ப்பது போன்ற பல சவால்களை அவர் சந்தித்தார். அவர் இந்தச் சிக்கல்களைப் பார்த்து துவண்டு போகாமல், ஒவ்வொரு சவாலிலிருந்தும் பாடத்தைக் கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தாலும், கல்லூரிக்குச் செல்ல வேண்டி இருப்பதால், அதிகாலையிலேயே எழுந்து பேக்கிங் வேலைகளை முடித்து, ஆர்டர்களைப் பேக்கிங் செய்து, பார்சல் செய்யத் தயார் செய்துவிட்டுத்தான் கல்லூரிக்குச் செல்கிறார். படிப்புக்கும், தொழிலுக்கும் இடையில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் அவரது தினசரி போராட்டமாக உள்ளது.
ஆர்வம், கடின உழைப்பு, மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் இருந்தால், ஒரு சிறிய யோசனையைக் கூட, படிக்கும்போதே ஒரு பெரிய வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதற்கு மாணவி சம்ரிதி இலந்தோலி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கத் தயங்கும் பல இளம் தலைமுறையினருக்கு சம்ரிதி ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.