அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு சாத்தியமா? – ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது, இனாமாக இரண்டு சர்வதேச சர்ச்சைகள் அவர் கரங்களில் சேர்ந்தன. ஒன்று காசா போர், இன்னொன்று உக்ரைன் போர். இந்த இரண்டு போர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ட்ரம்ப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவேளை ஓவர்நைட்டில் இதெல்லாம் சாத்தியமானால் நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு ட்ரம்ப்பை பரிசீலித்தே ஆக வேண்டிய சூழல் கூட உருவாகலாம். அதெல்லாம் ‘ஹைபாதெட்டிக்கல்’ என்று கடந்து சென்று இன்னும் அலசினால், அடுத்த ஆண்டுக்கான சில சாத்தியக்கூறுகளை பார்க்க இயல்கிறது என்கின்றனர் சில நிபுணர்கள்.
ட்ரம்ப் முன்னால் இருக்கும் சவால்கள்: அதிபராவதற்கு முன்னதாகவே ட்ரம்ப் அளித்த வாக்குறுதிதான் உக்ரைன் போர் நிறுத்தம். உக்ரைன் – ரஷ்யா போரைப் பொறுத்தவரை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி என இருவரையும் தனித்தனியே சந்தித்து தீவிர ஆலோசனை நடத்திவிட்டார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வர அவருக்கு இரண்டு சாத்தியங்கள் உள்ளன.
1. பாதுகாப்பு உத்தரவாதம்: அதாவது, அமெரிக்காவும், நேட்டோவும் உக்ரைன் ராணுவத்துக்கு தொடர்ச்சியாக ஆயுதங்களை அளித்து தக்க அரணாக இருக்க ஒப்புக்கொள்வது. இதன்மூலம் எதிர்காலத்தில் உக்ரைன், ரஷ்யாவின் அல்லது எந்தவொரு புதிய ஆக்கிரமிப்புகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்.
2. நிலப்பகுதி பரிமாற்றம்: அதாவது, உக்ரைன் மற்றும் ரஷ்யா தற்போதைய எல்லைக் கோட்டின் அருக்கே உள்ள சில பகுதிகளை பரஸ்பர புரிதலோடு பரிமாறிக் கொள்ளுதல். கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கோரி வரும் சூழலில் இந்த நிலப்பகுதி பரிமாற்றம் சுமுகமாக நடந்தால் நீடித்த அமைதிக்கு வழிவகை ஏற்படும்.
ஆனால், இந்த 2 வாய்ப்புகளில் நிலப் பரிமாற்றத்துக்கு உக்ரைன் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்பதும், தான் குறிவைத்த நிலப்பரப்பை வசப்படுத்தாமல் ரஷ்யாவும் ஓயாது என்பதுதான் கள நிலவரமாக உள்ளது. இது ட்ரம்ப்புக்கு உண்மையிலேயே மிகப் பெரிய சவால்தான்.
இதற்கிடையில் தான், முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் தங்களால் முடக்கிவைக்கப்பட்டுள்ள சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துகளை போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவுவதற்காக பயன்படுத்துவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. இதன் பின்னணியில் ட்ரம்ப்பின் தலையீடு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.
உக்ரைனுடனான போரினால் ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட 10 லட்சம் வீரர்களை இழந்துள்ளதாகத் தெரிகிறது. அங்கு கடன்களுக்கான வட்டி விகிதம் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடன் வாங்குவது கடும் சவாலானதால் பல தொழில்கள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளன. அரசுக்கான நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) என்பது பெரும்பான எரிசக்தி ஏற்றுமதி சார்ந்திருக்கிறது. அதுவும், பொருளாதார தடைகளுக்கு உட்பட அதிக வாய்ப்புள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.
இந்தச் சூழலில், பொருளாதார நெருக்கடிகளை மேலும் வலுப்படுத்த ட்ரம்ப் அதிகக் கெடுபிடியுரன் செயல்படும்போது, ஏற்கெனவே அழுத்தத்தை சந்தித்து வரும் புதின், அடிபணிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒருவேளை ரஷ்யா – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானால் 2026 அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதில் ட்ரம்ப்புக்கான சாத்தியமும் அதிகரிக்கும்.
கைமீறிப் போகும் காசா போர் நிறுத்தம்..! – ட்ரம்ப் அதிபரானபோது காசா போர் நிறுத்தத்துக்காக முந்தைய அதிபர் பைடன் ஏற்படுத்தியிருந்த ‘மூன்று கட்ட தற்காலிக போர் நிறுத்தம்’ அமலில் இருந்தது. ஆனால் மார்ச் மாதம் அமலுக்கு வந்த முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடனேயே அது மீறப்பட்டது.
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் இன்றளவும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. காசாவை முழுமையாகக் கைப்பற்றி அதில் இஸ்ரேலியர்களை மீள்குடியேற்றம் செய்வது என்ற திட்டத்தில் இஸ்ரேல் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது. காசா நிலவரத்தை இப்போது பார்த்தால் மோசம் என்பதைக் கடந்து ‘மிக மிக மோசம்’ என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
கடந்த வாரம் ட்ரம்ப், இஸ்ரேல் – காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திடத்துக்கு இஸ்ரேல், அரபு தேசங்கள், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், இந்தோனேசியா கூட ஆதரவு தெரிவித்தன.
இந்தப் போர் முடிவுக்கு வரும் பட்சத்தில், கடந்த 20 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டுக்குள் காசாவை வைத்திருந்த ஹமாஸ், இனியும் அதிகாரம் செலுத்த முடியாது. காசாவில் பாதுகாப்பை ஏற்படுத்த, புதிய ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி அதை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்கா தலைமையில் சர்வதேச பங்களிப்போடு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இது தொடர்பாக எகிப்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் காசா மீதான அதிகாரத்தை முழுமையாகக் கைவிட ஹமாஸ் நிச்சயமாக ஒப்புக்கொள்ளாது என்றே கூறப்படுகிறது. அதனால், பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கலாம். ஆனால், இதை கணித்த ட்ரம்ப் இவ்விவகாரத்தில் ஹமாஸ்கள் காலம் தாழ்த்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதேபோல், இஸ்ரேலும் தனது தரப்பில் காலங்கடத்துதல் உத்திகளை பயன்படுத்தக் கூடாது என்று நெருக்குகிறார்.
ஹமாஸ் ஆதிக்கம் இல்லாத காசா, இதுதான் நீண்ட கால அமைதிக்கான அத்தியாவசியத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், காசாவில் முழுக்க முழுக்க இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளுக்குள் இது வெகு நிச்சயமாக சாத்தியமாகும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு, பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையை நோக்கிய வழி என்ற கருத்தாக்கத்துடன் ட்ரம்ப் வகுத்துள்ள 20 அம்சத் திட்டத்தை பின்பற்றுவதில் இஸ்ரேலும் முனைப்பு காட்ட வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் திட்டம் மிகவும் தெளிவானதாகவே உள்ளது. ஹமாஸ் உயிருடன் இருக்கும், உயிரிழந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். காசா மீதான ஆதிக்கத்தை துறக்க வேண்டும். போர் நிறுத்தத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும். இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும். காசா கொடும்போரை நிறுத்த விரும்புபவர்கள் எல்லோரும், இந்த அம்சங்களை ஹமாஸுக்கு வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்க்கா கூறுகிறது. இவையெல்லாம் கனிந்துவரும்போது ட்ரம்ப்புக்கான அமைதி நோபல் பரிசு வாய்ப்பு இரட்டிப்பாகும்.
125-வது நோபர் பரிசு விழாவில்… – அமைதிக்கான நோபல் விருது டிசம்பர் 10-ல் ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த விருதுக்கான தெரிவுப் பட்டியலை இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேர்வுக் குழு பரிசீலிக்க ஆரம்பித்து அக்டோபர் 10-ல் அறிவிப்பை வெளியிடும். அதனால், இந்த ஆண்டு ட்ரம்ப் இந்தப் பரிசைப் பெறுவது சாத்தியமில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நோபல் பரிசின் 125-வது ஆண்டு விழா வருகிறது. அப்போது தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் இன்னும் வலுவாக முன்வைக்க வாய்ப்புகள் இருக்கும் என்று கூறலாம். அதற்கு மேற்கூறிய போர் நிறுத்தக் கணக்குகள் எல்லாம் சரியாக ஒர்க் அவுட் ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாது, அதிபர் ட்ரம்ப்பும் அவரது சகாக்களும், உக்ரைன் – ரஷ்யா போர், காசா – இஸ்ரேல் போர்களை முடிவுக்குக் கொண்டு வரும் பணிகளில் சற்றும் சுணக்கம் காட்டிவிடலாம், இதே உத்வேகத்துடன், கெடுபிடியுடன், கண்டிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.