இரு முனைப்போர் குறித்த பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்!

தாலிபான்களுடனான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு முனைப்போருக்கு நாடு தயாராக இருப்பதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், மீண்டும் ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.

இந்திய எல்லையில் பதட்டங்கள் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேர்காணலில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ​​”பாகிஸ்தான் இரு முனைப் போருக்குத் தயாராக உள்ளது” என்று கூறினார். 

அத்துடன், இந்தியா எல்லையில் மிலேச்சத்தனமாக விளையாட வலுவான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்த அவர், இஸ்லாமாபாத் ஏற்கனவே பதிலடி கொடுப்பதற்கான உத்திகளை வகுத்துள்ளதாகவும் கூறினார்.

பின்னர் அறிவிப்பாளர், “இரு முனைப் போர் வெடித்தால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பிரதமருடன் ஏதேனும் விவாதித்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு  கவாஜா ஆசிப், ஆம், உத்திகள் நடைமுறையில் உள்ளன. அவற்றைப் பற்றி நான் பொதுவில் விவாதிக்க முடியாது, ஆனால் எந்தவொரு நிகழ்வுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பதிலளித்தார்.

முந்தைய அறிக்கையில், ஆசிப், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் இந்தியா சார்பாக “ஒரு மறைமுகப் போரை” நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியும் உள்ளார்.

இஸ்லாமாபாத் மற்றும் காபூல் இடையே எல்லை தாண்டிய மோதல்களில் பல வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 48 மணி நேர போர் நிறுத்தம் புதன்கிழமை இரவு அமுலுக்கு வந்தது.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு வாரமாக நீடித்த வன்முறையைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தானுடனான அதன் தெற்கு எல்லையின் சில பகுதிகளில் தலிபான்கள் தாக்குதலைத் தொடங்கினர், இதனால் இஸ்லாமாபாத் அதன் சொந்த வலுவான பதிலடியை உறுதியளித்தது. 

பாகிஸ்தான் தாலிபான் (TTP) தலைமையிலான பயங்கரவாதக் குழுக்களை ஆப்கானிஸ்தான் தனது மண்ணில் வைத்திருப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் காபூல் அதனை மறுக்கிறது.

நன்றி

Leave a Reply