இறுதியாக உலகக் கிண்ணத்தை வென்றார் ஏபிடி. வில்லியர்ஸ்!

ஏபிடி. வில்லியர்ஸ் இறுதியாக ஒரு சர்வதேச கிண்ணத்தை வென்றுள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையில் ஒருபோதும் ஐ.சி.சி. அல்லது ஐ.பி.எல். பட்டத்தை வெல்லாத தென்னாப்பிரிக்க ஜாம்பவான், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 2025 ஆம் ஆண்டு உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு உதவினார்.

ஆகஸ்ட் 02 ஆம் திகதி பேர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த இறுதிப் போட்டியில், அவரது அணி, பாகிஸ்தான் சாம்பியன்களை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது.

அற்புதமான ஃபார்மில் இருந்த ஏபிடி, இறுதிப் போட்டியில் ஒரு விரைவான சதத்தை விளாசினார்.

தொடை தசைநார் காயத்துடன் போராடிய அவர், 47 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 100 ஓட்டங்களை எடுத்தார்.

அவரது அபாரமான துடுப்பட்டம் (60 பந்துகளில் 120 ஓட்டம்) 196 ஓட்டங்களை 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் எளிதாக தென்னாப்பிரிக்கா அணிக்கு சேஸிங் செய்ய உதவியது.

ஹஷிம் அம்லா 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும், முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் ஜேபி டுமினி, அரைசதம் அடித்து வெற்றிக்கான ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்டு முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் தீர்மானித்தது.

அதன்படி, அவர்கள் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்தனர்.

ஷர்ஜீல் கான் 44 பந்துகளில் 76 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றி ஏபி டி வில்லியர்ஸுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிண்ணத்தையும், மறக்கமுடியாத மகிழ்ச்சியான முடிவையும் அளித்தது.

டி வில்லியர்ஸ் போட்டி முழுவதும் சிறந்த ஃபார்மில் இருந்தார்.

துடுப்பாட்டத்திலும், களத்தடுப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சில அற்புதமான பிடியெடுப்புகள் மற்றும் ரன்-அவுட்களையும் புரிந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் 41 வயது ஆன டி வில்லியர்ஸ் தேர்வானார்.

Image

நன்றி

Leave a Reply