இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07.08.25) முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரியை அறவிடவுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார்.

குறைந்தபட்ச விகிதம் 10% ஆக இருந்ததுடன், இது சில நாடுகளுக்கு மிக அதிகமாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது.

அத்தகைய சூழலில், இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.

இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.

எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தியதன் பலனாக இலங்கைக்கு 20% வரி அறவிடுவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், இந்த புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

அமெரிக்கா விதித்த வரி கொள்கையை கையாள்வதில் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply