தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று (2) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பழங்காலத்து ஐம்பொன் விஷ்ணு சிலையை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட இருந்த 52 மற்றும் 35 வயதான இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் கைதான இருவரும் மேலதிக விசாரணைக்காக தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.