இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் இலங்கையில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படும் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன.
இந்தநிலையிலேயே, சீன தூதரகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இதன்படி, சீன நாட்டவர்களின் பிம்பத்தைப் பாதிக்காமல் இருப்பதற்கு, சீன சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சீனத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது.
இந்த காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதுடன், இந்த பட்டியலில் சீனா நான்காவது இடத்தில் பதிவாகியுள்ளது.