இலங்கையில் சுவிற்சர்லாந்து ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது தனது விலையுயர்ந்த ஐபோனை பேருந்தில் தவறவிட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜியான் முல்லர் என்ற ஆசிரியருக்கு பொலிஸாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்புள்ளை பொலிஸாரின் துரித நடவடிக்கையால் 10 நிமிடங்களில் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

கண்டி நகரில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த முல்லர், மாலை 6.30 மணியளவில் தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இறங்கினார்.

சிறிது தூரம் சென்ற பின்னரே, தனது கையடக்க தொலைபேசி காணாமல் போனதை உணர்ந்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர், தம்புள்ளை நகரில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட்டை அணுகி உதவி கோரினார்.

பயணியை அமைதிப்படுத்திய சார்ஜன் உடனடியாக செயல்பட்டார். முல்லர் வைத்திருந்த பேருந்து பயணச்சீட்டின் உதவியுடன் பேருந்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டார். பின்னர் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் பேசி, பேருந்தில் உள்ள CCTV கேமராக்களைச் சோதிக்குமாறு அறிவுறுத்தினார்.

அடுத்த 10 நிமிடங்களில், கையடக்க தொலைபேசி பேருந்திலேயே இருக்கிறது, அதை தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம் என ஓட்டுநர் தகவல் வழங்கியுள்ளார்.

தனது கையடக்க தொலைபேசி மீண்டும் கையில் வாங்கிய முல்லர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார். “எனது கற்பித்தல் பணிக்கான மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் இதில்தான் இருந்தன.

எனது உயிரே திரும்பக் கிடைத்தது போல உணர்கிறேன்”என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

உதவி செய்த சார்ஜன்ட் மற்றும் தம்புள்ளை தலைமையக பொலிஸார் ஆகியோருக்கு முல்லர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

அவர்களுக்குப் பரிசாகப் பணம் வழங்க அவர் முன்வந்த போதும், பொலிஸார் அதனை மறுத்துவிட்டனர்.

“இது எங்களது கடமை. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவது இலங்கை பொலிஸாரின் பொறுப்பாகும்” என பொலிஸார் குறிப்பிட்டனர்.

நன்றி

Leave a Reply