இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனுடைய உண்மை நிலவரம் என்ன?
இலங்கையின் புவிச்சரிதவியல் பின்னணி, விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்கள்இ அரசாங்கம் கொண்டுள்ள நிலைமை ஆகிய மூன்றையும் ஆராய்ந்து உண்மை நிலைமையை முன்வைப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கைக்கு என்று தனித்துவமான புவிச்சரித வரலாறு ஒன்று உண்டு.
தகட்டோட்டத்துடன் தொடர்பட்டவகையில் புதிய பல ஆய்வுகள, புதிய பல சான்றுகளை விஞ்ஞானபூர்வமாக முன்வைத்துள்ளன. அச்சான்றுகளின் அடிப்படையில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அரசாங்கம் நிலநடுக்கத்துக்கான ஏதுநிலைகளை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட்ட ஆதாரங்களும் உண்டு.
இத்தகைய பின்னணியில் நிலநடுக்கம் தொடர்பான சர்ச்சைகள் எதற்கு என்பதே எனது கேள்வி. இருப்பினும், கீழ்வரும் மூன்று தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ள விடயங்கள் வாயிலாக இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா அல்லது அசாத்தியமா என்பதை தெளிவாக புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன்.
புவிச்சரிதவியல் பின்னணி:
புவிச்சரிதவியல் பின்னணியை ஆராய்ந்தால் இலங்கையில் நிலநடுக்கம் என்பது புதியதொரு விடயமோ, புதினமானதொரு விடயமோ அல்ல. இலங்கையில் தோற்றம், புவிச்சரிதவியல் அமைப்பு, இடவமைவு அனைத்துமே தகட்டோட்டப் பின்னணியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத விடயங்கள். புவிச்சரித வரலாற்றில் உலகம் ஐந்து பெருங் கண்டங்களைச் சந்தித்துள்ளது.
அவற்றுள் ஐந்தாவது பெருங்கண்டமான பஞ்சியா கண்டம் படிப்பாக தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்து, பலதிசை நோக்கி நகர்ந்து, ஏழு கண்டங்களையும்இ ஐந்து சமுத்திரங்களையும் கொண்டு இன்றைய நிலையை எட்டியுள்ளது. இப்புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் இலங்கை உட்பட இந்தியத் துணைக்கண்டம் ஆபிரிக்கா கண்டத்தில் மடகஸ்கார் நாட்டுடன் இணைந்திருந்தது. இதற்கு ஆதாரமாக, மடகஸ்கார் நாட்டின் கல்லியல் அமைப்புடன் இலங்கையின் கல்லியல் அமைப்பான உயர்நிலத்தொடர் ஒத்த தன்மையுடையதாக காணப்படுகின்றமையைக் குறிப்பிடலாம்.
பின்னர் அதிலிருந்து படிப்படியாகப் பிரிந்து, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து இற்றைக்கு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஐரோ-ஆசியாவுடன் இனைந்துகொண்டது.

அவ்வாறு இணைந்தபொழுது புவியோட்டில் ஏற்பட்ட மடிப்புகளே உலகிலேயே அதிகூடிய உயரமான எவரெஸ்ட் சிகரத்தைக் கொண்ட ஒரு இமாலயத்தொடரின் உருவாக்கத்துக்கு வழிசமைத்தது.
இத்தகைய பின்னணியிலேதான் இலங்கையில் அதியுயர்வான உச்சியாக உள்ள பேதுருதலாகலை உச்சிவரை உயர்ந்து மத்திய மலைநாடும் தோன்றியது. இவ்வாறு தகட்டோட்டம் காரணமாக முன்னொரு காலத்தில் ஒரு இடத்திலும், மற்றுமொரு காலத்தில் இன்னுமொரு இடத்திலும் தரித்துத் தரித்து இன்றுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்ததுதான் இலங்கை.
தகட்டோட்டத்தின் காரணமாக 200 மில்லியன் ஆண்டுகளில் சுமார் 4630 கிலோ மீற்றர் துரத்துக்கு இலங்கை நகர்ந்துள்ளது.
இந்நகர்ச்சிகளுக்கிடையில் எவ்வளவு மாற்றங்களை இலங்கை புவிச்சரிதவியல் ரீதியாக பெற்று வந்திருக்கும் என்பதை தகட்டோட்டக் கோட்பாட்டை புரிந்துகொண்ட ஒவ்வொருவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்வர். அதில் ஒரு பகுதிதான் நிலநடுக்கங்கள். அவை இந்தியாவில் எவ்வாறு செல்வாக்குப் பெற்றுள்ளதோ, அதேபோன்றதொரு செல்வாக்கினை இலங்கையும் கொண்டிருப்பதென்பது விதிவிலக்கல்ல. அந்தவகையில் நிலநடுக்கள் இலங்கையில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
இன்றுள்ள நிலநடுக்க தரவுகளை ஆராய்ந்தால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நிலநடுக்கம் நிகழ்ந்துவரும் ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது. இந்த வரலாற்றில் ஒரேயொரு தடவை பாரிய நிலநடுக்கத்தை இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன் 1615.04.14 ஆம் திகதி 6.4 ரிச்டர் அளவில் சந்தித்து.
2000 நபர்கள், 200 வீடுகள் அழிவதற்கு காரணமானது. தற்பொழுது Pallekele, Buddhangala, Mahakanadarawa and Hakmana ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள நிலநடுக்க பதிகருவிகள், மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் புவிச்சரித அளவை போன்றவற்றுடனான சர்வதேச வலையப்பு போன்றன சமீபகால நிலநடுக்கங்களை துல்லியமாக வெளிப்படுத்தி வருகின்றன.
வருடாந்தம் குறைந்தது 3-5 நிலநடுக்கங்கள் இக்கருவிகளால் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறாக, இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றுப் பின்னணி அமைந்து காணப்படுகின்றது.
நிலநடுக்கங்களுக்கான விஞ்ஞானரீதியான சான்றுகள். நிலநடுக்கங்கள் தொடர்பில் துல்லியமான நிலைமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் தகட்டோட்டச் செயன்முறை பற்றிய ஆய்வுகளை அத்துறையில் பெருவளர்ச்சி கண்டுள்ள நாடுகள் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு பிராந்திய அடிப்படையிலும், உலகளாவிய ரீதியிலும் ஆய்வுகளைச் செய்து பல அதிர்ச்சியூட்டும் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
பொதுவாக தகட்டு விளிம்புகளில்தான் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால் இலங்கை அமைவுபெற்றுள்ள இந்தியக் கவசத் தகட்டின் எல்லைகளைத் தாண்டி தகட்டின் உட்பாகங்களில் இலங்கையிலும் இலங்கைக்கு அருகாமையில் சமுத்திர அடித்தளத்திலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டமைக்கான பதிவுகள் பல காணப்படுகின்றன.

இதற்கான புவிச்சரிதவியல் பின்னணியை எடுத்துக் காட்டும் வகையில் நவீன ஆய்வுகள் அமைந்துள்ளன. அவ்வாய்வு முடிவுகளின் அடிப்படையில் நிலநடுக்கம் ஒன்று ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தகட்டு விழிம்புகள் மட்டுமல்ல, உள்ளகத் தகடுகள், குறைகள் ஆகியனவும் அமைந்து காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, 1. உலக தகடுகளின் பரம்பல் தொடர்பாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில், Peter Bird என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் உலகில் 52 தகடுகள் உள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 52 தகடுகள் தவிர, பெயர் சூட்டப்படாமல் பல புதிய தகடுகள் உள்ளமையும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் விசேடமாக இலங்கைக்குத் தெற்காக ஒரு புதிய தகட்டை அந்த ஆய்வில் அடையாளப்பட்டுள்ளது.

- அடுத்ததாக, 2016 இல் ஜேர்மனியின் புவி விஞ்ஞானத்துக்கான ஆய்வு நிலையம் வெளியிட்ட ஒரு ஆய்வில் இலங்கைக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றருக்கு உட்பட்ட தொலைவில் வங்காளவிரிகுடா கடலடித்தளத்தில் பல குறைகள் விருத்தியாகியிருப்பது காட்டப்பட்டுள்ள அதேவேளை அவற்றுள் உதைப்புக் குறை (Thrust fault) வகையைச் சார்ந்தவை அதிகமாக இருப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

- இவற்றை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய அமெரிக்காவின் புவிச்சரிதவியல் அளவை என்று அழைக்கப்படும USGS அமைப்பும் தேசிய நிலநடுக்க தகவல் மையமும் (NEIC) 2007.07.18 ஆம் திகதி இலங்கையின் தென்மேல் கரையில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் 5.2 என்னும் ரிச்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை பதிவு செய்து தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

இத்தரவானது மேலே கூறப்பட்ட இரண்டு புவிச்சரிதவியல் மாற்றங்களையும் விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தி நிற்கின்றது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை சுமார் 30 க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் இலங்கையில் பதிவாகியிருப்பதனையும் குறிப்பிடலாம். ஆகவே! இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ளன என்பதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்துள்ளன.
நிலநடுக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மேலே இலக்கமிட்டுக் கூறப்பட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கம் எந்தளவுக்கு தெளிவுடன் இருக்கின்றது என்பது தொடர்பில் அதனால் எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அனர்த்த முகாமைத்துவத்தில் இதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படையாக இல்லை.
அதன் காரணமாக இதன் பின்னணியை துறைசார்ந்து புரிந்துகொண்டவன் என்ற அடிப்படையில் இது ஒரு உணர் திறனான பிரச்சினை (Sensitive Issue) என்பதனால் ஊடகங்களில் அதனை அம்பலப்படுத்தாது, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக மக்களுக்கான வழிப்புணர்வினை முன்னெடுக்கும் நோக்கோடு ஆதாரபூர்வமான தரவுகளுடன் கடந்த டிசம்பர் 2024 இல் தற்போதைய ஆளுனர் ஊடாக நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு என்னுடைய கவனத்தை எடுத்துச் சென்றிருந்தேன். அங்கிருந்து எனக்கு 2025.01.24 திகதியிடப்பட்டு ஒரு பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம் நிலநடுக்கம் தொடர்பில் நாட்டின் நிலைப்பாட்டை 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட மத்திய வங்கி ஆண்டறிக்கையில், 6வது பக்கத்தில் “சுனாமி பேரழிவு” என்னும் தலைப்பில் சிறப்புக் குறிப்பு-1 எனக் குறிப்பிட்டு, விரிவானதொரு விளக்கத்தை முன்வைத்துள்ளது. அதில் குறிபிடப்பட்டுள்ளதாவது, “…இலங்கை பாரிய இந்தோ அவுஸ்ரேலிய பூமித் தட்டில் தட்டு எல்லைகளிலிருந்து மிகத்தொலைவில் காணப்படுகின்றது. இதனால் புவியதிர்விலிருந்து இலங்கை பாதுகாப்பாக இருப்பதாகவே பலரும் கருதினர்.
எனினும் அண்மைய ஆதாரங்கள்இ இந்தோ அவுஸ்ரேலிய தட்டில் இலங்கைக்கு தென்மேற்கு கரையிலிருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள் தொலைவில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதனையும், இதனால் புதியதொரு பூமித்தட்டு உருவாகியுள்ளதனையும் புலப்படுத்தியுள்ளன.
எனவே! நில அதிர்வுகளுக்கு இலங்கை ஆட்படக்கூடிய ஏதுநிலை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தற்போது அதிகமாக உள்ளது. இது இலங்கையின் சகல அம்சங்களுக்குமான திட்டமிடலின் போது மிகப் பிரதான விடயமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்”

அரசாங்கமே நிலநடுக்கம் ஏற்படும் என்பதை மத்திய வங்கி ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது என்றால் இது தெரியாமல் பலர் முட்டி மோதிக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. அன்றைய அரசாங்கம் கண்ட கனவு அல்ல இது. ஒரு அரசாங்கம் விஞ்ஞான பூர்வமான அதாரங்கள் இன்றி மத்திய வங்கி ஆண்டறிக்கையில் கருத்து தெரிவிக்க முடியுமா? நிட்சயமாக இதனை பிரசுரித்தவர் யாரோ, அவரிடம் பூரணமானதும் விஞ்ஞானபூர்வமானதுமான ஆவணம் இருக்கின்றது. அதனை பெற்று இன்றைய அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும்.
இப்படி ஒரு ஆவணம் நாட்டில் இருக்கின்ற பொழுது இதற்கு மாறாக எவருடைய கருத்தும் அதனை புறந்தள்ளுவதாக அமைய முடியாது. காரணம், இது தொடர்பில் நாம் கதைப்பது எல்லாம் எமது சொந்த ஆய்வுகளை வைத்து அல்ல, அதுசார்ந்து நாம் பெற்ற அறிவை வைத்தே! நாம் பெற்றுள்ள அறிவுக்கான தேடலின் கனதியைப் பொறுத்தே எமது கருத்தின் ஆழமும் அமையும். ஆகவே! இலங்கை நிலநடுக்க வலயத்துள் அமைந்த ஒரு நாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதாரண அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகுவதற்கான புவிச்சரித நிலைமை இலங்கையில் உண்டு. ஆனால் பாரிய நிலநடுக்கம் வருமா? எப்பொழுது வரும்? என்ன அளவில் வரும்? என்பது மனித அறிவியலுக்கு அப்பாற்பட்டது.
அதனை எவருமே கூறமுடியாது. இந்த நிலையில் நிலநடுக்கம் நாளை வரும்…! நாளை வரும்…!! என்று மக்கள் இன்றுள்ள தமது வாழ்க்கையின் நிம்மதியை இழந்துவிடாது அதனை மறந்து இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
எமக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கின்றது, அதனையிட்டு அவதானமாக இருக்கவேண்டும் என்பது எமது வாழ்வின் அடிப்படை. இன்றைய அரசாங்கம், மத்திய வங்கி ஆண்டறிக்கை ஆணித்தரமாகக் கூறும் கருத்துக்களுக்கு அடிபணிந்து, காத்திரமான முகாமைத்துவ நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும். அனர்த்தக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால் அது நாட்டுக்கும், நாளைய சந்ததிக்கும் நன்மை பயக்கும் ஒரு விடயமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
கிருபா இராஜரெட்ணம்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
புவியியற்றுறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
The post இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்! appeared first on Global Tamil News.
