இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு


சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின்  (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு 

சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) தலைமை நிறைவேற்று அதிகாரி Dr. ஹிஷாம் பின் சாத் அல் ஜத்ஹேய் அவர்களுடன் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவிக்கும் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இது ரியாதில் உள்ள SFDA தலைமையகத்தில் இடம்பெற்றது. 

தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் SFDA தலைமை அதிகாரி Dr. அல் ஜத்ஹேய் ஆகியோர், இலங்கை உணவு மற்றும் பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் வழிகள் மற்றும் முறைகளை ஆராய்ந்து, இலங்கை தயாரிப்புப் பொருட்களின் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கலந்துரையாடினர். 

சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (SFDA) மற்றும் தொடர்புடைய இலங்கை பங்குதாரர்கள் (ஏற்றுமதி அபிவிருத்தி வாரியம், இலங்கை தேயிலை வாரியம் உள்ளிட்டோர்) இடையே தகவல் பரிமாற்ற அமர்வுகள் மற்றும் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை தூதுவர் அமீர் அஜ்வத் முன்வைத்தார். இத்தகைய ஏற்பாடுகள் மூலமாக இலங்கை ஏற்றுமதியாளர்கள், SFDA விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை அறிந்து கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இரு தரப்பும் இத்தகைய ஏற்பாடுகளை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.  

சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (SFDA) என்பது சவூதி அரேபியாவில் உள்ள ஒரு அரச நிறுவனம் ஆகும். இது உணவு, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பிற தயாரிப்புகளின் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தி, கண்காணித்து, உறுதி செய்வதற்குப் பொறுப்பாக உள்ள உள்ள ஒரு நிறுவனமாகும்.

இலங்கை தூதரகம்

நன்றி

Leave a Reply