பிரதேச சபைகள் மீது குறிப்பாக கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அதிகமாக பத்திரிகைகளில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவன் என்ற அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற பின் நடைபெற்றிருக்கும் முன்னேற்றங்களையும் பட்டியலிட வேண்டிய பொறுப்பும் எனக்கு உண்டு.
முதலில் நான் வசிக்கும் பிரதேச சபையில் இருந்தே தொடங்கலாம்.நல்லூர் பிரதேச சபையில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றம் உண்டு.இதுவரை ஐந்து வட்டாரங்களில் கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கி ஒவ்வொரு மையத்திலும் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். அவர் அந்த இடத்திலேயே தொடர்ந்தும் காணப்படுகிறார்.வீதிகளில் கழிவு கொட்டப்படுவது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது. எனினும் முழுமையாக குறைந்து விட்டது என்று கூற முடியாது.
வடக்கின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று ஆகிய திருநெல்வேலி சந்தைக்கு அருகாக வரும் வீதியில் இப்பொழுதும் மூட்டை மூட்டையாக குப்பைகளைக் காணலாம்.அந்த வீதியில்தான் சந்தை இயங்கும் நேரத்தில் பெருமளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.தவிர சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளில் ஒரு பகுதியினர் அந்த வீதியில் சிறுநீர் கழிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த வீதி திரும்பும் இடத்தில் ஒரு பாடசாலை உண்டு.
மேலும் சந்தைக்குள் வெற்றிலை துப்ப வேண்டாம் என்று கண்டிப்பான கட்டளைகள் பார்வையில் படக்கூடிய சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் அங்கு வேலை செய்யும் வியாபாரிகளில் ஒரு பகுதியினரும் மூட்டை தூக்கும் வேலையாட்களில் கணிசமான தொகையினரும் எந்த கட்டளைகளையும் பொருட்படுத்தாமல் பொறுப்பின்றி ஆங்காங்கே துப்பக் காணலாம்.
கழிவு சேகரிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு அங்கே ஒரு மனிதனை சம்பளத்துக்கு அமர்த்தி நாள் முழுவதும் அந்த மையத்திலேயே இருத்தி வைத்திருக்கிறார்கள்.ஆனால் அப்பிரதேச மக்களும் வெளி ஆட்களும் எந்த விதமான பொறுப்போ குற்ற உணர்ச்சியோ இன்றி குப்பைகளைத் தெருக்களில் போட்டு விட்டுப் போகிறார்கள்.அதிலும் குறிப்பாக மலக் கழிவுகளோடு காணப்படும் பம்பஸ்கள்.
இது ஒரு பண்பாடு சார்ந்த பிரச்சினை. தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. ஒரு பிரதேச சபை அதன் ஆட்சி காலத்துக்குள் உடனடியாக தீர்த்து வைக்க முடியாத பிரச்சினையுந்தான். தண்டனைகளின் மூலம் ஒரு பண்பாட்டைக் கட்டி எழுப்ப முடியாது. தன்னுடைய வீட்டுக்குள், தன்னுடைய குசினிக்குள், தன்னுடைய சாமி அறைக்குள் துப்பக் கூடாது என்று சிந்திக்கும் பிரகிருதிகள் யாருடையது வீட்டு முத்தத்திலோ அல்லது யாருடையதோ மதிலின் மறைவிலோ குப்பைகளைப் போட்டுவிட்டுப் போகிறார்கள்.
இந்த விடயத்தில் பிரதேச சபை தனக்குரிய கடமையை முதற்கட்டமாகச் செய்து முடித்திருக்கிறது.அடுத்த கட்டமாக அப்பகுதி மக்களை அல்லது வெளியில் இருந்து அப்பகுதிக்குள் குப்பைகளைக் கொண்டு வந்து போடும் நபர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? கடுமையான தண்டனைகளின் மூலம் உடனடிக்குக் கட்டுப்படுத்தலாம். குப்பை கொட்டும் இடங்களில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதன்மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் இது ஒரு பண்பாடு சார்ந்த பிரச்சினை. பொது இடத்தில் துப்பக் கூடாது, பொது இடத்திற்கு குப்பை கொட்டக் கூடாது என்பது ஒரு சுய ஒழுக்கம்.அந்த ஒழுக்கத்தை ஒரு பிரதேச சபை தன் ஆட்சிக் காலத்துக்குள் உருவாக்க முடியுமோ தெரியவில்லை. தனிய பிரதேச சபை மட்டும் கையாளக்கூடிய ஒரு விடயம் அல்ல இது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை கட்டி எழுப்புவதற்கு அதன் பழக்க வழக்கங்களை கட்டி எழுப்புவதற்கு ஒரு பிரதேச சபையின் ஆட்சிக்காலம் மட்டும் போதுமா ?.
அதேசமயம் சில பிரதேச சபைகள் கழிவுப் பொருட்களை எங்கே கொண்டு போய்க் கொட்டுகின்றன என்பது தொடர்பாகவும் வாதப்பிரதிவாதங்கள் சர்ச்சைகள் உண்டு.இதுதொடர்பாக நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக அரியாலையில் சிறு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.இவ்வாறான நடவடிக்கைகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால்,கழிவு முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கும் அப்பால் மாவட்ட மட்டத்தில் அல்லது மாகாண மட்டத்தில் மையப்படுத்தப்பட்ட பொருத்தமான திட்டமிடல் தேவையாக இருக்கிறது என்பதைத்தான்.
எனினும் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற கிட்டத்தட்ட ஐந்து மாத கால பகுதிக்குள் கழிவு முகமைத்துவம் தொடர்பில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இங்கே தொகுத்துக் கூறவேண்டும்.
அதுபோலவே வெள்ளம் வடியும் வாய்க்கால்களும் பெருமளவுக்கு தூர்வாரப்பட்டு வருகின்றன.பருவ மழையை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபை மட்டுமல்ல யாழ். மாநகர சபையும் உட்பட நீர் தேங்கும் ஆபத்துள்ள, வெள்ளம் பெருகும் ஆபத்துள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் வெள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. A9 வீதி,அரியாலையில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்கால் தூர்வாரி சுப்ரபாக்கப்பட்டிருக்கிறது.பருவ மழையை நோக்கி பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் விழிப்பாகச் செயல்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்தும் விடயத்திலும் உள்ளூராட்சி சபைகள் உடன் நடவடிக்கை எடுத்துள்ளன.இது ஏற்கனவே இருந்த உள்ளூராட்சி சபைகளால் தொடங்கப்பட்ட ஒரு விடயந்தான். ஆனாலும் இந்த விடயத்தில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பை ஏற்றதும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.எனினும் கட்டாக்காலிகளின் தொகை பெருகிக்கொண்டு போகிறது.தமிழ்ப் பகுதிகளில் நாய்களைப் பாதுகாக்கும்,பராமரிக்கும் நிலையங்கள் எவையும் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு சிவ பூமி அறக்கட்டளை அவ்வாறான ஒரு நிலையத்தை தென்மராட்சியில் தொடங்கியது.ஆனால் அதற்கு கிடைத்த ஆதரவை விடவும் விமர்சனங்களே அதிகம் என்று சிவ பூமி அறக்கட்டளையின் பணிப்பாளர் ஆறு திருமுருகன் கவலைப்பட்டார்.இப்பொழுது அந்தப் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டுவிட்டது. தென்மாராட்சியில் சாவகச்சேரியில் அவ்வாறான ஒரு பராமரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டு பிரதேச சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் ஒவ்வொரு பிரதேச சபையும் தனக்கென்று தட்டாக்காலி நாய்களை பராமரிக்கும் நிலையங்களை உருவாக்குவதை விடவும் மாகாணத்துக்கான அல்லது மாவட்டத்துக்கான பொதுவான நாய் பராமரிப்பு நிலையங்களை உருவாக்குவதே பொருத்தமானதாக இருக்கும்.
சட்டவிரோத கட்டுமானங்கள் எல்லாப் பிரதேச சபைகளுக்கும் பொதுவான ஒரு பிரச்சினை.புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உதாரணமாக,கரவெட்டி மாலிசந்திப் பகுதியில் முன் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானம் ஒன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளரின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பில் சில நாட்களுக்கு முன் இடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேறு பிரதேச சபைகளும் இது போன்ற சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபைகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்தைக் கொண்டிருக்கும் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் வெள்ள வாய்க்கால்கள் மூடப்படுவதற்கு பிரதான காரணம் சட்டவிரோத கட்டுமானங்களும்தான்.உதாரணமாக நல்லூர்.வட மாகாண ஆளுநர் இது தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.எனினும் பெரும்பாலான உள்ளூராட்சிப் பிரதேசங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன என்று கூற முடியாது. அதேசமயம் புதிய நிர்வாகம் பொறுப்பை ஏற்றபின் இந்த விடயத்தில் வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதனை இங்கு தொகுத்துச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அடுத்தது நீர் தொடர்பான விழிப்பு.இது எல்லாப் பிரதேச சபைகளுக்கும் பொதுவான ஒரு விடயம்.நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் அதே சமயம் வெள்ள நீரை பொருத்தமான விதங்களில் முகாமை செய்வது தொடர்பில் ஒவ்வொரு பிரதேச சபையும் தனக்கேயான தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது.
நீர் வடியும் வாய்க்கால்களைத் தூர் வாருவது,நன்னீர் தேங்கக்கூடிய குளங்களைத் தூர் வாருவது போன்ற விடயங்களில் பெரும்பாலான பிரதேச சபைகள் ஆர்வமாகக் காணப்படுகின்றன.தென்மராட்சியில் அங்குள்ள நீர் மூலங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு துறைசார் நிபுணர்களை அழைத்து பிரதேச சபை உறுப்பினர்கள் ஆலோசனைகளைப் பெற்றிருக்கும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் சில பிரதேச சபைகள் குழாய்க் கிணறுகளை கிண்டுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேச சபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் தெரிவித்தார்.”நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்குடன் இனிவரும் காலங்களில் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதாயின் பிரதேசசபையின் அனுமதியினையும் பெறுமாறு வலியுறுத்தி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று பிரதேச சபையின் தவிசாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நல்ல விடயம்.நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பாகவும் மக்கள் வாழும் இடங்களில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை உணர்வோடும் பிரதேச சபைகள் செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. கழிவு முகாமைத்துவம், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது,பசுமைத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவது…. போன்றவை எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் பொதுவானவை. வெள்ள நீர் தேக்கம் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கு குறிப்பாக நகர மயமாக்கம் அதிகமாக நிகழ்ந்த உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமேயான பிரச்சினை.
இதுபோல ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் அதற்கான தனித்துவமான பிரச்சனைகள் இருக்க முடியும். அவற்றை அந்தந்தப் பகுதி உள்ளூராட்சி சபைகள் இனம் கண்டு தீர்க்க வேண்டும்.
இந்த விடயத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளூர் ஆட்சி சபை உறுப்பினர்களை ஓரிடத்தில் அழைத்து பிரதேச சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்,பிரதேச சபைகளுக்கு உள்ள நிதி மூலங்கள்,பிரதேச சபைகளுக்கு உள்ள பொதுவான பிரச்சினைகள்,தனித்துவமான பிரச்சனைகள்… போன்றவைகள் தொடர்பாக அறிவூட்ட வேண்டும்.
மேலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தனியாகவும் நிறுவனமாகவும் ஒவ்வொரு பிரதேச சபையிலும் ஏதோ ஒரு தொண்டைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஒரு மையத்துக்குள் கொண்டுவர வேண்டும்.புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எப்படி முகாம் செய்வது என்று ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் தீர்மானிக்க வேண்டும். சில புலம்பெயர்ந்த தமிழர்கள் கிராமங்களையே தத்தெடுக்கும் அளவுக்கு ஆர்வமாகவும் தாகமாகவும் உரிய பொருளாதார பலத்தோடும் காணப்படுகின்றார்கள். எனவே அவ்வாறான நபர்களையும் நிறுவனங்களையும் இனங்கண்டு அவர்களோடு பொருத்தமான விதங்களில் இணைந்து உள்ளூராட்சி சபைகளைக் கட்டி எழுப்பலாம். “அரசாங்கம் நிதியைத் தரவில்லை,அரசாங்கம் விடுவதில்லை” என்று முறைப்பாடுகளைப் பட்டியலிடாமல் இருக்கின்ற இடைவெளிக்குள் எப்படி ஒவ்வொரு கிராமத்தையும் பசுமைக் கிராமமாக மாற்றுவது? எப்படி நிலத்தடி நீரைப் பாதுகாப்பது? எப்படி உள்ளூர்ப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது? எப்படி உள்ளூர் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவது? என்று தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் சிந்திக்க வேண்டும். புதிய சபைகள் இயங்கத் தொடங்கி 5 மாதங்கள் ஆகின்றன. இந்த ஐந்து மாத கால பகுதிக்குள் கணிசமான சபைகள் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு முன்னேற்றங்களை காட்டியுள்ளன.
