64
ஈராக் மற்றும் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள், மத்திய கிழக்கை மீண்டும் தீவிர பதற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் – யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் இப்பகுதிக்கு வந்தடைந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தத் தயாராக இருப்பதை உணர்த்தும் வகையில், தங்களது முந்தைய தாக்குதல் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இது உலக வர்த்தகப் பாதைகளுக்கே நேரடியான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஈராகில் மிக சக்திவாய்ந்த ஆயுத அமைப்பாகக் கருதப்படும் கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல்-ஹமிதாவி,“ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அது இப்பகுதியில் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கும். எதிரிகள் மரணத்தின் கசப்பான வடிவத்தை ருசிப்பார்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே “இந்த வன்முறைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) இந்தப் பகுதியில் தனது ராணுவ இருப்பை பலப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, லெபனான், ஏமன், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்ள தன் ஆதரவு ஆயுதக் குழுக்களை ஒருங்கிணைக்கும் “எதிர்ப்பு அச்சு” (Axis of Resistance) மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நேரடி மோதலில் ஈடுபடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
________________________________________
