உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
உக்ரைன் மீது கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
அப்போது, இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர் உட்பட உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் , பிரதமர் மோடி,
ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான சந்திப்பு எப்போதும் மறக்க முடியாதது.
டிசம்பரில் ஜனாதிபதி புடினின் இந்திய வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கடினமான காலங்களிலும் கூட இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றாக நிற்பதில் இருந்து எங்கள் நட்பின் சிறப்பையும், கூட்டாண்மையின் ஆழத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது, எங்கள் மக்களுக்கானது மட்டுமல்ல.
உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு நன்மை பயக்கக் கூடியது.
மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், தோளோடு தோளாக நின்று பணியாற்றி வருகிறோம்.
உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்.
மேலும், உக்ரைனில் நீடித்த அமைதிக்கான பாதையை விரைவாக கண்டறிய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாகும்.
சமாதானத்தை நோக்கி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இம்முயற்சியில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். என கூறினார்.