‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம் | Beneficiaries attacked at Ungaludan Stalin Camp: TN BJP Condemns

சென்னை: “உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுவதா?” என திமுக அரசுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள சாத்தூர் கிராமத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வெங்கடபதி என்ற 65 முதியவர் சாத்தூரில் இருக்கும் ரிசர்வ் ஃபாரஸ்ட் நிலத்துக்குப் பட்டா கொடுத்தது தவறு என்று சொல்லி ஒரு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்று நடந்த முகாமில் மனு அளித்திருக்கிறார்.

முதியவர் கொடுத்த மனுவுக்கு எந்த ஒப்புதல் சீட்டும் கொடுக்கப்படவில்லை. அதனைக் கேட்டதற்கு அங்கிருந்த சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முதியவரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகத் தெரியவருகிறது. மேலும், அங்கிருந்த எஸ்.ஐ ஒருவர் முதியவரை அடித்து வெளியே அனுப்பும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 5 சதவீத மனுக்களின் கோரிக்கையைக் கூட நிறைவேற்றியிருக்காது இந்த திமுக அரசு. இந்நிலையில், உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுகிறார்கள். இந்த ஊழல் திமுக அரசுக்கு மக்கள் சம்பட்டி அடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் நாள் விரைவில் வரும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply