வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்கப்படாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
“மிக முக்கியமாக, உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. பணம் செலுத்தப்படும் முன்னரே முறைகேடுகள் நடந்துவிட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை” என்று ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
ஊழலை ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், நிவாரணப் பணியில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
முறைகேடுகள் குறித்து ஆதாரம் இருப்பின், அதனை நேரடியாகத் தமது கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்றும் ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக் கொண்டுள்ளார்
