உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்! 17 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேக வெடிப்பு (Cloudburst) என்பது ஒரு மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் இயற்கை நிகழ்வாகும். இது ஒரு சிறிய பகுதியில், ஒரு மணி நேரத்திற்குள்  சுமார் 100 மில்லி மீற்றர் அல்லது அதற்கும் அதிக மழை பெய்வதை குறிக்கும்.

அந்தவகையில்  உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் மீட்புப் படையினர்  மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் குறித்த பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே நீரில்  மூழ்கி உள்ளதாகவும்,   இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply