32
“டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப்போகிறது” என்று பீதியை ஏற்படுத்திய கானா நாட்டுச் சாமியார் எபோ நோவா (Ebo Noah) கைது செய்யப்பட்டுள்ளாா். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த 30 வயதான எவன்ஸ் எஷுன் (Evans Eshun), தன்னை ‘எபோ நோவா’ அல்லது ‘எபோ ஜேசஸ்’ என்று அழைத்துக்கொண்டு, கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
தன்னைத் தானே தீர்க்க தரிசியாக அறிவித்துக் கொண்ட எபோ நோவா , தன்னை கடவுளின் அவதாரம் என்று மக்களிடம் பரப்பி வருகிறார். இவர் கிழிந்த பழைய சாக்குத் துணிகளை அணிந்து கொண்டு, கையில் ஒரு பழமையான புத்தகத்தை ஏந்தியபடி வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
2025 டிசம்பர் 25 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழை பெய்யும் என்றும், பைபிளில் கூறப்பட்டது போன்ற ஒரு பிரம்மாண்ட வெள்ளத்தில் உலகம் அழியும் என்றும் அவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தாா். உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுள் தன்னிடம் கூறியதாகச் சொல்லி, சுமார் 8 பெரிய மரக் கப்பல்களை (Arks) அவர் கட்டினார்.
இதைக் கேட்ட பல மக்கள், அவர் கட்டிய கப்பலில் இடம் பிடிக்கத் தமது வீடு, காணி மற்றும் கால்நடைகளை விற்றுப் பணத்தை இவரிடம் கொடுத்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் இருந்துகூட கானாவிற்குத் தப்பி வந்துள்ளனர்.
டிசம்பர் 25 அன்று உலகம் அழியாததைக் கண்ட அவர், “நான் கடவுளிடம் மன்றாடியதால் அவர் அழிவைத் தள்ளிவைத்துள்ளார் . எனவே மக்கள் அனைவரும் கவலைப்படாமல் மது அருந்திப் பார்ட்டி கொண்டாடுங்கள்” என்று வீடியோ வெளியிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர் . தவறான கணிப்புகள் மூலம் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது, உலகம் அழியும் என்ற அச்சத்தைப் பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் மற்றும் நன்கொடைகளைப் பெற்று, சுமார் $89,000 மதிப்பிலான சொகுசு கார் (Mercedes-Benz) வாங்கியமை தொடா்பாகஅவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கானா காவல்துறை சைபர் குற்றப் பிரிவு, அவரைத் தேடி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31 அன்று அவர் கைது செய்யப்பட்டார். எபோ நோவாவை நம்பித் தமது வாழ்நாள் சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது நடுத்தெருவில் நிர்க்கதியாக நிற்கின்றனர். “கடவுள் அழிவைத் தள்ளிவைத்துள்ளார்” என்ற அவரது மழுப்பலான பதில் பாதிக்கப்பட்டவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
