உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை: இது ஆப்பிளின் சாதனைக் கதை! | 3 billion iPhones sold worldwide Apple success story

நியூயார்க்: உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன், ஐபேட், ஏர்பாட், ஹெட்போன், வாட்ச் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு என தனி வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு இதன் தரமும், செயல்பாடும் இருப்பதுதான் அதற்கு காரணம்.

ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் (1976) ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினர். முதலில் கம்யூட்டரை வடிவமைத்தார்கள். படிப்படியாக ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் டிவைஸ்களை சந்தையில் அறிமுகம் செய்தது. அது அனைத்துக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

ஆப்பிள் போன்: கடந்த 2004-ல் ஐபோன் முயற்சியை முன்னெடுத்தது ஆப்பிள் நிறுவனம். இதுவரை மொத்தம் 46 ஐபோன் மாடல்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. 2007-ல் முதல் ‘ஐபோன்’ மாடல் அறிமுகமானது. தொடர்ந்து ஐபோன் 3ஜி, ஐபோன் 3ஜிஎஸ், ஐபோன் 4, ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5சி, ஐபோன் 5எஸ், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 7, ஐபோன் 8, ஐபோன் எக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14, ஐபோன் 15, ஐபோன் 16 மாடல்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபோன் 16இ சந்தையில் அறிமுகமானது. அடுத்த மாதம் ஐபோன் 17 மாடல் அறிமுகமாக உள்ளது.

விற்பனையில் 3 பில்லியன்: இந்நிலையில், உலக அளவில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 3 பில்லியன் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதை அண்மையில் காலாண்டு வர்த்தகம் சார்ந்த வருவாய் தொடர்பான கூட்டத்தில் டிம் குக் உறுதி செய்ததாக தகவல். நடப்பு ஆண்டின் கடைசி காலாண்டு விற்பனையில் சுமார் 44 பில்லியன் டாலர்களை ஐபோன் விற்பனை மூலம் ஈட்டியுள்ளது ஆப்பிள். இது கடந்த ஆண்டின் இதே காலாண்டு விற்பனை உடன் ஒப்பிடும் போது சுமார் 13 சதவீதம் அதிகம்.

இருப்பினும் வருகின்ற காலாண்டில் வெளிநாட்டில் இருந்து போன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்ற காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் கூடுதல் வரியை செலுத்த வேண்டி உள்ளது. இது வரும் காலாண்டில் 1.1 பில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவாலை ஆப்பிள் எப்படி சமாளிக்க உள்ளது என்பது கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அதிகளவில் ஆப்பிள் போன்களை ஆப்பிள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருவது கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply