*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை.
-அ.நிக்ஸன்-
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட குற்றச் செயல்கள் பற்றியும் வாக்குமூலங்களை வழங்க வேண்டும் என ஜெனீவாவில் கேட்கப்படுவதாக தெரிகிறது. குறிப்பாக அங்கு சென்றுள்ள தமிழர் தரப்பிடம் இது தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது.
இன அழிப்பு குற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தரப்பு 2009 இற்குப் பின்னரான சூழலில் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கத் தவறியதன் விளைவுகள் தான் இவை என்பது கண்கூடு.
பொறுப்புக் கூறல் என்பது வெறுமனே தனிநபர் குற்றங்களுக்கானது அல்ல. அரச பொறுப்புக் கூறல் மாத்திரமே முக்கியமானது. ஆகவே, அரச பொறுப்புக் கூறல் என்பதை தமிழ்த்தரப்பு கடந்த 15 வருடங்களில் பொருத்தமான முறையில் கோரவில்லை.
போர்க்குற்றம் – மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பது பற்றிய விசாரணைகள் குற்றம் இழைத்த சிங்கள அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் விடுதலைப் புலிகள் போராளிகள் உள்ளிட்ட தமிழ் போராளிக் குழுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.
அத்தோடு அந்த விசாரணை முடிவடைந்துவிடும். ஆனால், அரசியல் தீர்வுக்கு வழியிருக்காது. ஆகவே, ‘இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு’ என்பதை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற கடும் தொனியில் வாதங்கள் முன்வைக்கபட வேண்டும்.
ஒற்றையின் கீழ் உள்ள அரசியல் யாப்புச் சட்டங்கள் – அதன் நீதிமன்றங்கள் 1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புக் காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ளன என்பதை காரண – காரியத்துடன் விளக்கியிருக்க வேண்டும்.
இந்த விளக்கத்தின் பின்னணியில், அரச பொறுப்புக் கூறல் அவசியமானது என தமிழ்த் தரப்பு அழுத்தம் திருத்தமாக முன்வைத்தால் மாத்திரமே இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதை துணிவுடன் கோர முடியும். அத்துடன், இன அழிப்பு என்பதை விசாரணை செய்வதற்குரிய சாட்சியப் பொறிமுறைகள் சர்வதேச தரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்குரிய தயாரிப்புகள் தமிழ்தரப்பினால் செய்யப்படவுமில்லை.
2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பின் தொடர்ச்சியான பலவீனமான செயற்பாடுகளின் பின்னணியிலேயே, உள்ளக விசாரணை பொறிமுறை என்பதை மாத்திரம் ஜெனீவா மனித உரிமை தீர்மானமாக நிறைவேற்றும் ஆபத்து 2025 இல் ஏற்பட்டுள்ளது.
ஆக, இந்த ஆண்டு ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மாத்திரமே அரச பொறுப்புக் கூறல் என்பது அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒருமித்த குரலாக கோரப்படவில்லை.
இப் பின்னணியில் தான் அநுர அரசாங்கம் உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் (Domestic legal system) பிரகாரம் அந்த இன மோதலுக்குரிய அரசியல் தீர்வை கொண்டு வர முற்படுகிறது. உள்நாட்டு நீதிமன்றங்கள் ஊடாகவே அனைத்துக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் நடத்த ஜெனீவாவில் விருப்பம் தெரிவித்துமுள்ளது. இதனை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அதேநேரம்,ஈழத்தமிழர்கள் போன்று பாதிக்கப்பட்ட அரசு அற்ற இனம் ஒன்று சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகள் அதற்கு இடம் கொடுக்காது.
குறிப்பாக, சர்வதேச நீதி என்பது புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களின் பிரகாரமே அமைந்துள்ளது எனலாம்.
ஆகவே, புவிசார் அரசியல் – பொருளாதார இலாப நோக்கில் ஐ.நா நியமங்களும் சர்வதேசச் சட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், அரசு அற்ற ஓர் இனம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எந்த வகையான அணுகு முறைகளை பின்பற்ற முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது.
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத் தொடரில் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அதன் ஊடான அரசியல் – பொருளாதார லாபங்களை கணக்கிட்டு இலங்கை விவகாரத்தை ஆராயும் உறுப்பு நாடுகள் தமக்குரிய முறையில் தீர்மானத்தை தயாரிப்பதாக தெரிய வருகின்றது.
ஆணையாளர் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ள முன்னோடி அறிக்கையை மையப்படுத்தி தீர்மானம் வரவுள்ளது. இலங்கை இராணுவம் – விடுதலைப் புலிகள் என்ற இரு தரப்பு குற்றங்களை சமநிலையில் வைத்து, அதேநேரம் போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு உள்ளக பொறிமுறை அல்லது சர்வதேச தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை தீர்மானம் பரிந்துரைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னணியில், உள்ளக விசாரணை பொறிமுறையை தீர்மானம் பரிந்துரைத்துள்ளது போலும்.
ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.
2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார்.
அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (Oslap -OHCHR Sri Lanka accountability project) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.
புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனீவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை.
தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது?
எதற்காக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது?
2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு.
ஆனால்,அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை 2025 இல் இடம்பெறும் அமர்வில் கவனத்தில் எடுக்கவில்லை?
2010 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, தமது அறிக்கையில், சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த விவகாரங்கள் பற்றி ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை?
ஆகவே, அமெரிக்க – இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை மையப்படுத்தி ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன என்பதும், அதற்கு ஐ.நா கட்டமைப்பு ஒத்துழைக்கிறது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் முறைமைகளுக்குள் முடங்கி இருக்கின்றமையும் இதற்குப் பிரதான காரண – காரியமாகும்.
பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்காது என்றில்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் அனைத்தும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை இலங்கை எவ்வாறு தமக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகின்றதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையில், அரசு அற்ற இனமாக வேறு நாடுகளுடன் தமிழ்த்தரப்பு உறவை பேண வேண்டும்.
பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் சிறிய நாடு ஒன்றுடன் அல்லது சீனா போன்ற வல்லரசுகளுடன் ஏதோ வழியில் உறவை பேணக்கூடிய வழி வகைகள் இல்லாமலில்லை.
அவ்வாறு அணுகும்போது இலங்கை ஒரு சிறிய அதுவும் பொருளாதார பலவீனம் உள்ள நாடு என்ற அடிப்படையில் நிச்சயமாக ஈழத்தமிழர் விவகாரங்களில் விரும்பியோ விரும்பாமலோ கீழ் இறங்கி வர வேண்டிய கட்டாயச் சூழல் எழும்.
இலங்கையை தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க – இந்திய அரசுகள் கூட படி இறங்க வேண்டிய பின்னணி உருவாகும். ஆனால், இந்த இராஜதந்திரம் என்பது ஈழத்தமிழ்த் தரப்பிடம் இன்று வரையும் இருப்பதாக இல்லை.
சிங்களத் தலைவர்கள் காலத்துக்கு காலம் அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குறிப்பாக போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகள் தம்மை நோக்கி படி இறங்கி வரக்கூடிய அணுகுமுறைகள் – விட்டுக் கொடுப்புகள் போன்ற இராஜதந்திரங்களை பல சந்தர்ப்பங்களில் பேணியிருந்தனர். இந்த அணுகுமுறையை தமிழ்தரப்பு நன்கு கற்க வேண்டும்.