36
சமூக வலைத்தளங்கள் வாயிலாக நவீன ரக காஸ் அடுப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, தம்பதி என அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தற்போது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், முகநூலில் மலிவு விலையில் காஸ் அடுப்பு விற்பனைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை நம்பி அந்த நபர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். மோசடியாளர்கள் தங்களது வங்கி கணக்கு இலக்கத்தை வழங்கி, பணத்தை வைப்பிலிடுமாறும் மேலதிக விபரங்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.
அதனை நம்பிய அந்த நபர், காஸ் அடுப்பிற்கான தொகையான 32,000 ரூபாயை அவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிட்யுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட மோசடியாளர்கள், இரண்டு மூன்று திகதிகளாக அடுப்பை அனுப்பி வைப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். இறுதியில் அடுப்பை அனுப்பிவிட்டதாகப் பொய் கூறியதுடன், அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது தமது வாட்ஸ்அப் கணக்கையே நீக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் இது குறித்துத் தேடியபோது, அந்த முகநூல் கணக்கில் இருந்த தம்பதியினரின் புகைப்படம் ஒரு புகைப்படக் கலைஞரால் (Photographer) தற்செயலாகப் பதிவேற்றப்பட்ட மற்றுமொரு தம்பதியின் படம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பிறருடைய புகைப்படத்தைத் திருடி போலி முகநூல் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
தற்போது இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
முன்பின் தெரியாத நபர்களுக்கு முகநூல் விளம்பரங்களை நம்பி முன்கூட்டியே பணத்தை வைப்பிலிடுவதைத் தவிர்க்கவும். எதனையும் உறுதிப்படுத்திய பின்னரே கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும்.

