நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு சஜித் பிரேமதாச ஆராய்ந்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில் ” தற்போது, நாடாளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மக்களின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படும்போது, ஒலிவாங்கியைத் துண்டிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக, நானும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவதை விடுத்து,
மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே எழுந்து நிற்கிறோம்.
இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில்
அதைத் தடுப்பது, கருத்துகளை வெளியிடுவதற்கு தடங்கல் ஏற்படுத்துவது இழிவான செயலாகும்.
ஒலிவாங்கிகளை துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து
எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து
நடைமுறை ரீதியான பதில்களை பெற்றுக் கொடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
தீர்வுகளை வழங்கும் யுகத்துக்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும், பொய்யான கதைகளை முன்வைக்கும் யுகமே தற்சமயம் காணப்படுகின்றது. இவ்வாறு பிரச்சினைகளை நாம் முன்வைப்பது அரசியல் நாடகமல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு முன்வைப்பதும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதுமாகும்.
அரசாங்கத்தின் பல்வேறு நாடகங்களுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டாலும், எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாடகங்களை நடத்தாது மக்களினது பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்கி வருகிறது” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.