(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக் கூடிய இயலுமையுடைய எந்தவொரு நபருக்கும் கட்சி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து கோரிக்கை விடுத்தால் அது குறித்து ஆராய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா,
புதிய குழுக்களுக்கு பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இளைஞர், யுவதிகள் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும். எனக்கு ஜனாதிபதியாகும் கனவு இல்லை.
ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து ஜனாதிபதியாகக் கூடிய தகுதி தமக்கிருந்தால் அதனை நிரூபித்தால் பொறுப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.