கொல்கத்தா: துர்காபூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் தந்தை, “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனெனில் இங்கே, அவளுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறார். இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் கல்லூரிக்கு திரும்பினார்.
அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியுடன் சென்ற ஆண் நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நேற்று போலீஸில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவியின் நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, “எனது மகள் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கிறாள். முதல்வர், டிஜி, எஸ்பி, ஆட்சியர் அனைவரும் எங்களுக்கு நிறைய உதவி செய்து வருகிறார்கள், தொடர்ந்து அவளுடைய உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். என் மகளை இங்கிருந்து ஒடிசாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், ஏனெனில் இங்கே, அவளுடைய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. அவளை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நாங்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இரவு 10 மணிக்கு, அவளுடைய தோழி எங்களுக்கு போன் செய்து, உங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என கூறினார். நாங்கள் ஒடிசாவின் ஜலேஷ்வரில் வசிக்கிறோம். என் மகள் இங்கு படித்துக்கொண்டிருந்தாள். சம்பவத்தன்று, அவளுடைய வகுப்புத் தோழர்களில் ஒருவர் சாப்பிட செல்லலாம் எனக் கூறி அவளை வெளியே அழைத்துச் சென்றார். ஆனால் இரண்டு அல்லது மூன்று ஆண்கள் வந்தபோது, அவன் அவளைக் கைவிட்டு ஓடிவிட்டான்.
அவர்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடந்தது. இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. இவ்வளவு கடுமையான சம்பவம் நடந்தது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு எந்த அமைப்பும் இல்லை, எந்த பதிலும் இல்லை” என்று கூறினார்.
இந்த சம்பவத்தை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி கடுமையாகக் கண்டித்து, “மேற்கு வங்கத்தின் துர்காபூரில் ஒடிசா மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வேதனையானது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டத்தின்படி முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்.
மேற்கு வங்க அரசைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
துர்காபூரில் ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க காவல்துறை மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக அசன்சோல்-துர்காபூர் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.