என் வாழ்வில், மறக்க முடியாத நாள்


2025.11.27 அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

இரவு 9 மணி, பக்கத்து வீட்டு ஆண்ட்டி  வெள்ளம் வர இருப்பதாக கூறிச் சற்று கவனமாக இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த 15 நிமிடத்தில் என்னுடைய சகோதரர் கடும் பதற்றத்துடன் வந்து கதவைத் தட்டினார்.. வீதிகளில் வெள்ளம் வர ஆரம்பித்து விட்டது உங்களை எனது வீட்டிற்குக் கூட்டி செல்லவே வந்தேன் என்றார். 

 வயதான எனது பெற்றோரையும் இரண்டரை வயதிற்குற்பட்ட எனது இரு பிள்ளைகளையும் கூட்டிச்செல்லும் அளவிற்கான காலநிலை அப்போது காணப்படவில்லை இடியுடன்கூடிய பெருமழை மொத்த ஊரையும் சூழ்ந்து கொண்டிருந்தது. (நானும் எனது தாயும் அவருடன் செல்வதற்கு மறுத்ததற்குக் காரணம் அதுவே)

இருந்தாலும் எனக்கு மனதிற்குள் ஒரு பயம் இருக்கவே செய்தது. வீட்டில் என்னைத் தவிர திடகாத்திரமானவர்கள் யாரும் இல்லை என்னுடைய கனவரும் ஓர் அலுவல் நிமித்தமாக அக்கரைப்பற்றிற்கு சென்றிருந்தார் என்பதோடு பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்ட சற்று நடக்க இயலாத  தந்தையை எப்படி கையாளுவேன் என்ற யோசனையும் எனது பயத்தை மேலும் அதிகரித்தது. அவசரத்திற்கு யாரையும் கூப்பிட தொலைபேசி இணைப்பும் செயற்படவில்லை. 

எனது தாயிடம் இங்கு இருக்க வேண்டாம் சதீஷ் அண்ணாவின் வீட்டிற்றிக்கு (எனது வீட்டின் மேல் வீட்டில் வசிப்பவர்) செல்வோம் என்று கூறினேன்.  

  வெள்ளம் பற்றிய ஆபத்தை உணராத எனது தாய் வெளியில் செல்ல மறுத்து விட்டார்.

இரவு 10.30 போல வெளியே ஆட்கள் நடமாட்டமும் எப்போதும் இல்லாதவாறு அதிக சலசலப்பும் காணப்பட்டமை ஏதோ பெரிய ஆபத்து வர இருப்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது. எனவே யன்னல் வழியாக வெளியே பார்ப்பதும் வீட்டில் இருக்கும் மடிக்கணினி, கல்விச்சான்றிதழ்கள், நகைகள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக இருக்க வேண்டி உயரமான இடங்களில் வைப்பதுமாக இருந்தேன். 

நேரம் சரியாக 11 மணி காய்ச்சல் காரணமாக சரியாக 6 மணித்தியாலத்தில் மருந்து அருந்த வேண்டி இருந்ததால் மருந்தை அருந்திவிட்டு முன் கதவு யன்னல் எல்லாம் ஒழுங்காக அடைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்து விடுவோம் என்று கதவருகில் செல்ல.. என் கால்களில் தண்ணீர்.. வல்ல இறைவனை ஒரு கனம் நினைத்தவளாக பதறியடித்துக்கொண்டு ஓடிப் போய் எனது பெற்றோரை எழுப்பினேன். உடனே மேல்வீட்டு சதீஷ் அண்ணாவின் கதவைத் தட்டினேன். நான் தட்டிய கதவு சத்தம் கம்பளை முழுவதும் கேட்டிருக்கக் கூடும். சதீஷ் அண்ணா வெளியே வந்தார். பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் அங்கிளும் அங்கே தான் இருந்தார்கள். 

சதீஷ் அண்ணாவிடம் வீட்டிற்குள் தண்ணீர் வந்ததைக் கூறி உதவி கேட்டேன். தூங்கிக்கொண்டிருந்த என் இரு பிள்ளைகளையும் முதலில் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கிக் கொடுத்தேன்.  உம்மாவை மெதுவாக மேலே ஏறுமாறு கூறிவிட்டு வாப்பாவின் கையைப்பிடித்து மெதுவாகக் கூட்டி வரும்போது தண்ணீர் முழங்கால் வரை நிரம்பிவிட்டது. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து நடக்க இயலாத வாப்பாவை பின்வாசல்வரை கூட்டி வந்துவிட்டேன். தண்ணீரின் கனம் தாங்க முடியாமல் வாப்பா சற்று தடுமாறிவிட்டார். அதைப்பார்த்த உம்மா கத்தவும் இருவரையும் தைரியப்படுத்தவேண்டிய நிலையில் நான் இருந்தேன். 

வாப்பாவிடம் “வாப்பா ஒன்றுமில்லை உங்களால் ஏலும்; படியின் பிடி கனமாகவே உள்ளது,  அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுங்கள் நானும் உங்களைப் பிடித்துக்கொள்வேன் பயப்பட வேண்டாம்” என்று கூறினேன். வாப்பாவும் அல்லாஹ்வின் உதவி கொண்டு ஏறிவிட்டார்.  அல்ஹம்துலில்லாஹ். 

வீட்டில் இருக்கும் பொருட்கள் எதையும் எடுத்துவர முடியுமா என்று யோசித்து கீழே இறங்க முற்பட்டபோது வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்க, தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை உயிர் பிழைத்தவரை  போதும் என நினைத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டேன்.

அன்று இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. விடியல் வரை தண்ணீர் மெதுவாக ஏறிக்கொண்டே இருந்தது. சதீஷ் அண்ணாவின் வீட்டிற்கும் தண்ணீர் வந்துவிட்டால் எங்கும் செல்வதற்கு வேறு வழியும் இல்லை. மின் இணைப்பையும் துண்டித்து விட்டார்கள். அன்று முழுவதும் இவைதான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

காய்ச்சல் என்று நான் முன்னரே தூங்கி  இருந்தால்… 

இன்னும் 15 நிமிடம் தாமதமாகி இருந்தால்… 

வாப்பா தடுமாறிய நேரம் விழுந்து இருந்தால்.. 

இவ்வாறு பல்வேறு யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என் இரு பிஞ்சுகள் தூங்குவதைப் பார்க்கும் போது வரவிருந்த ஆபத்தை எண்ணி இதயம் இறுகிப் போனது.. 

விடிந்த பின்னர் வெளியே பார்த்தால் ஒரு கனம் இதயம் நின்று துடித்தது.. எனக்கு ஏதோ ஒரு தீவின் நடுவே மாட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சதீஷ் அண்ணாவின் வீட்டிற்கு தண்ணீர் வருவதற்கு ஒரு படியே எஞ்சியிருந்தது. எனது வீடு முற்றும் முழுதாக தண்ணீரால் நிரம்பி காணப்பட்டது.. 

இயற்கை அனர்த்தம் என்ற ஒன்றை சந்தித்தது இதுவே முதல் முறை. அன்றைய நாளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை என்பதே நிதர்சனமான  உண்மை..  அடுத்தநாள் தண்ணீர் இரங்கிய பின்னர் வீட்டை சென்று பார்த்தேன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.. 

எல்லாம் வல்ல இறைவன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துயரிலிருந்து மீண்டுவர தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.😐

(வெள்ளம் ஏற்பட்ட மறுநாள் காலை இரண்டு அடிக்கு தண்ணீர் வற்றிய பின்னர் மேல் மாடியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றும் வெள்ளம் முற்றாக வற்றிய பின்னர் வீட்டிற்குள் சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)

(Mifra Aazath)

நன்றி

Leave a Reply