அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க செல்வந்தர் ஜெப்ரி எப்ஸ்டீனின் அந்தரங்கத் தீவுக்கு ஈலோன் மஸ்க் செல்லத் திட்டமிட்டிருந்ததாக புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படிஇ 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்க் எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ‘விடுமுறை நாட்களில் நான் அந்தப் பகுதிக்கு வரவுள்ளேன். உங்களைச் சந்திக்க உகந்த நேரம் எது?’ என்று மஸ்க் வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த எப்ஸ்டீன், ஜனவரி மாதம் ஆரம்பப்பகுதி சரியாக இருக்கும் என்றும், மஸ்க்கை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஜனவரி 2ஆம் திகதி தீவுக்கு எப்போது வரலாம் என்று மஸ்க் மீண்டும் கேட்டுள்ளார். எனினும், மஸ்க் அங்கு நேரில் சென்றாரா என்பது குறித்த தெளிவான ஆதாரங்கள் இந்த மின்னஞ்சல்களில் இல்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மஸ்க் பலமுறை மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மின்னஞ்சல் உரையாடல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
