எஸ்ஐஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் குழப்பங்கள் – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Confusion in the calculation form provided for SIR – Chief Minister Stalin alleges

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பெரும்பாலான மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றி இன்னமும் முழுதாக தெரியவில்லை.

சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நமது நிலைப்பாடு.

தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பாஜக எப்படி எல்லாம் மோசடி செய்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விளக்கி இருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கூட எஸ்ஐஆர்-ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். நாமும் எஸ்ஐஆர் அறிவித்த உடனே இது சதி என உணர்ந்து எதிர்த்தோம். கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். வரும் 11ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளோம்.

அதற்கு முன்பாக, எஸ்ஐஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கின்றன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கும் கணக்கீட்டு படிவம் கொடுத்திருக்கிறார்கள். உங்களில் சிலரிடமும் இந்த படிவம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும்.

இதில் முதலில் நமது விவரங்களைக் கேட்கிறார்கள். அடுத்தாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. அப்பாவா, அம்மாவா, அண்ணனா, தங்கையா, கணவனா, மனைவியா, பிள்ளைகளா யார்? எல்லோரும்தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?

வாக்காளரின் உறவினர் பெயர் என சொல்லப்பட்டுள்ள இடத்தில் முதலில் பெயரும் அடுத்ததாக வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண்ணும் கேட்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. முதலில், யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா?

சிறிய தவறு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் பெயரை நீக்கும் ஆபத்தும் உள்ளது. நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. நன்றாகப் படித்து பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள்கூட இந்த கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கும் தலை சுற்றும்.

இந்த படிவித்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மாநில தேர்தல் அதிகாரி, உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒட்டலாம் என்று அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். இது மற்றுமொரு இடியாப்ப சிக்கல்.

ஒருவேளை போட்டோ ஒட்டவில்லை என்றால் என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுா, படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி அதாவது இஆர்ஓ கையில்தான் இந்த முடிவு உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற கதையாக எல்லா இடத்திலும் குழப்பம்தான்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அதிமேதாவிகள், இந்த எஸ்ஐஆர் பணிகளை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தான் எனும்போது ஏன் திமுக எதிர்க்க வேண்டும் என்ற புரிதலற்ற உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஒரு பணியாளரை தேர்தல் ஆணையம் தனது பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்.

மக்களை திசை திருப்பினால் போதும் என தவறான தகவலை பரப்பக்கூடாது. எதையாவது பொய் சொல்லி எப்படியாவது எஸ்ஐஆர்-ஐ நடத்திடலாமா, ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிடலாமா என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.

எஸ்ஐஆர் தொடங்கிய நாளில் இருந்து களத்தில் இருக்கும் திமுகவினரும் நிறைய பிரச்சினைகளை நமது கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். பிஎல்ஓ-க்கள் வருவதில்லை, வந்தாலும் போதுமான எண்ணிக்கையில் கணக்கீட்டுப் படிவங்களைக் கொண்டு வருவதில்லை, நாள் ஒன்றுக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை.

இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியின் இஆர்ஓ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எப்படி கொடுத்து வாங்குவார்கள்? வாங்கிவிட்டால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதை கனிணி மயமாக்கி வரும் டிசம்பர் 7ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் எப்படி இதையெல்லாம் செய்து முடிக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது.

திமுகவும், கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து சொல்வது போல அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன்மூலம் உறுதியாகிறது. பிஎல்ஓ-க்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் இந்த எஸ்ஐஆர் பணியே மொத்தமாக பாதிப்பை சந்திக்கும். பிஎல்ஓ-க்களும் கட்சியின் பிஎல்ஓ2-க்களும் இணைந்து செயல்பட தேவையான அனைத்தையும் செய்வோம் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், அதற்கான ஒரு சூழலை அவர்கள் இதுவரை உருவாக்கவில்லை. திமுக பிஎல்ஓ2 தயாராக இருந்தாலும்கூட பல இடங்களல் பிஎல்ஓக்கள் வராமல் இருக்கிறார்கள்.

இதையெல்லம் மீறித்தான் நமது செயல்வீரர்கள் விழிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உங்கள் வாக்கு நீக்கப்படுமா என்று கேட்டால், அப்படி ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது. இல்லை என்று சொல்லிட முடியாது. அதை தடுக்க வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்குரிய பிஎல்ஓ யார் என்று கேட்டு அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி சரியாக நிரப்பி திரும்ப சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் மறக்காமல் வாங்க வேண்டும். இதுதான் உங்கள் வாக்குரிமையை பாதுகாக்கும்.

வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படையான மறுக்க முடியாத உரிமை. தற்போதைய நிலையில் எஸ்ஐஆர்-ல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள திமுக சார்பில் உதவி மையம் அமைத்துள்ளோம். இது திமுகவினருக்கு மட்டும் அமைத்திருக்கும் உதவி மையம் அல்ல. எல்லோருக்குமானது.

எனவே, திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், எஸ்ஐஆர்-ல் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய 08065420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க திமுக உங்கள் தோழனாக துணை நிற்க தயாராக இருக்கிறது. நமது வாக்குரிமையை பறிக்கக்கூடிய ஆபத்து நமது வாசல் தேடி வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்போடு இருந்து தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். நமது வாக்குரிமையை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply