ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு | Textile Department Welcomes GST Reform

கோவை: மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையால், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது” என்று ஜவுளித் தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியது: “மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை இரண்டையும் 5 சதவீத விதிப்புக்குள் கொண்டு வந்தது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், சிமென்ட், விவசாய பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஜவுளித் துறையில் பாலியஸ்டர், விஸ்கோஸ் மூலப்பொருட்களுக்கு 18 சதவீத வரி, செயற்கை இழை நூல் 12 சதவீத வரி விதிப்பால் மூலதனம் முடங்கி பலர் தொழிலே செய்ய இயலாமல் வெளியேறினர். தற்போது அனைத்துக்கும் 5 சதவீத வரி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ரூ.13,000 குறைந்துள்ளது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய ஒளி ஆற்றல் துறைக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரியை மாற்றி அமைத்தது தொழில் துறையினர் இடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகப் பெரிய தொழில் புரட்சியை ஏற்படுத்திய பிரதமர், மத்திய நிதி அமைச்சர், ஜவுளித் தொழில் துறை அமைச்சருக்கு நன்றி. தமிழக அரசு மின் கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின்(சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிசீர்திருத்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. ஜவுளி சார்ந்த அனைத்து பொருட்களும் 5 சதவீத வரி பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. செலுத்தும் வரியை திரும்ப பெறும் ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ சற்று குழப்பம் உள்ளது. விரைவில் நிவர்த்தி செய்யப்படும்” என்றார்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(சைமா) தலைவர் டாக்டர். சுந்தரராமன் கூறியது: “கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது செயற்கை இழை ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம், நூல்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் துணி மற்றும் ஆடைகள் 5 சதவீத வரி பிரிவில் வைக்கப்பட்டது. இதனால், ஆடைகளின் விலை அதிகரித்தது. நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்தும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க வரி சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி. அனைத்து முலப்பொருட்களுக்கும் சமமான மற்றும் குறைவான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, எளிய மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை பொருளாதாரம் உயரவும், அமெரிக்காவின் வரிச் சுமையை எளிதில் சமாளிக்காவும் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

‘லகு உத்யோக் பாரதி’ தமிழ்நாடு, மாநில தலைவர் வீர்செழியன், மாநில பொதுச் செயலாளர் கல்யாண் சுந்தரம் ஆகியோர் கூறும்போது, “மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. சுதந்திர தின உரையின்போது பிரதமர் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளன. மறைமுக வரி அமைப்பில் வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும்” என்றனர்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “செயற்கை இழை மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் ‘ஓஇ’ நூற்பாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் செலவு குறையும். பாலியஸ்டர், விஸ்கோஸ் நூல்களுக்கு 5 சதவீத வரி விதிப்பால் ஜவுளி துணி உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.

இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறும்போது, “பெரும்பான்மையான பொருட்களுக்கு குறைந்த வரி, வரி மாறுபாட்டை நீக்குதல் மற்றும் எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் போன்றவை நுகர்வை அதிகரிக்கவும், தொழில்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும்.

அனைத்து ஏற்றுமதி சந்தைகளிலும், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பருத்தி ஜவுளி ஆடைகள் பங்கு 10 முதல் 12 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில், செயற்கை இழை ஜவுளிப் பொருட்கள் பிரிவில் வெறும் 2–3 சதவீதம் மட்டுமே உள்ளது. மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்பு உள்ள இந்த துறையில் வரி சீர்திருத்தம் செய்யப்படுவதால், இந்திய செயற்கை இழைத் துறையில் போட்டித்திறன் அதிகரிக்கும். இந்நடவடிக்கைகக்கு நன்றி” என்றார்.

நன்றி

Leave a Reply