97
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், அமீரகத்தில் வசித்து வந்த ஈரானியர்களுக்கு எதிராக கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பகமான தகவல்களின் படி, அமீரகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஈரானியர்களின் வதிவிட அனுமதிகள் (Residency Permits) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘Golden Visa’ வைத்திருப்பவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த பல ஈரானியர்கள் மீண்டும் அமீரகத்திற்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், குடிவரவுத் துறையின் இணையதளங்களில் அவர்களது விசா நிலை ‘Void’ (செல்லாதது) என மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானியர்களால் நிர்வகிக்கப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் கலாசார மையங்களில் பணியாற்றிய ஊழியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன், அமீரகத்தில் ஈரானியர்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 530 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வங்கி நிதிகள் முடக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஈரானின் IRGC (Islamic Revolutionary Guard Corps) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் 120 பில்லியன் டாலர் நிதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஈரானின் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக அமீரக அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
