ஐரோப்பிய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது!

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது கடந்த வார இறுதியில்  நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக, இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க  ஒருவரை தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு (NCA) கைது செய்துள்ளது.

குறித்த சைபர் தாக்குதலானது விமானங்களுக்கான சேக்-இன் தொழில்நுட்பத்தை வழங்கும் Collins Aerospace நிறுவனத்தை குறிவைத்தது நடத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் பயணிகளை கையால் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அத்துடன் லண்டன் ஹீத்ரோ, பெர்லின், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான புறப்பாடு, வருகை உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து மட்டும் நேற்றைய தினம் 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் NCA அதிகாரிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு  பொலிஸாருடன்  இணைந்து, நேற்று மாலை  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  நபரை Computer Misuse Act சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்  நிபந்தனை பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து NCA தேசிய சைபர் குற்றப்பிரிவு தலைவர் பால் ஃபோஸ்டர் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த கைது விசாரணையின் ஆரம்ப நிலை மட்டுமே. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைபர் குற்றங்கள் உலகளவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அவை இங்கிலாந்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளன. இதனை குறைப்பதில் எங்கள் நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.” என்று கூறினார்.

இது இங்கிலாந்தில் இந்த ஆண்டில் பெரிய நிறுவனங்களை தாக்கிய பல்வேறு சைபர் தாக்குதல்களில் சமீபத்தியதாகும். சமீபத்தில் ஜாகுவார் லேண்ட்ரோவர் உற்பத்தியை வாரக்கணக்கில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் கோ-ஆப் போன்ற வணிக நிறுவனங்களும் தாக்குதலால் பெரும் இழப்புகளை சந்தித்தன.

Collins Aerospace நிறுவனம், உலகின் மிகப்பெரிய விமான மற்றும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான RTX குழுமத்திற்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply