சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப் பேசும் முன், நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கச்சதீவு இந்தியா, இலங்கைக்கு விட்டுத்தந்ததல்ல .சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவிடம் கையளித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையிடம் கச்சதீவு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் 1600 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி பழமையான ஆவணங்கள் உள்ளன எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே , முன்னாள் நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான விஜய், கச்சதீவு குறித்து பேசுவதற்கு முன், இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ஆழ்வலை மீன்பிடி முறையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அவர்களுக்கு முன்னெடுக்க வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.