கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதுவர் ஐவன் ரட்ஜன்ஸ் (Iwan Rutjens) அவர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (19) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகளை நினைவு கூர்ந்த துணைத் தூதுவர் ரட்ஜன்ஸ், இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள டச்சு பாரம்பரியங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், புதிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
தங்கள் நாட்டு நிபுணர்கள் யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும், அந்த மரபுகளைப் பாதுகாக்க உதவ ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறையின் அபிவிருத்திக்காக நெதர்லாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பான பல விடயங்களை முன்வைத்தார்.
ஒலுவில் துறைமுகத்தின் புனர்நிர்மாணம்: மணல் படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்கு தொழில்நுட்பத் தீர்வொன்றை வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த துணைத் தூதுவர் ரட்ஜன்ஸ், இப்பகுதிக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய முன்னணி டச்சு நிறுவனங்களுடன் இது குறித்து கலந்துரையாடுவதாகவும், முன்மொழியப்பட்ட தொழில்நுட்பத் தீர்வு வெற்றிபெற்றால், அதற்குச் சலுகைக் கடன் (Soft Loan) வசதியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை நீரேரிக்கு மிதக்கும் துறைமுகங்கள்: வாழைச்சேனை நீரேரியில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கு கொங்கிறீட் துறைமுகங்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மிதக்கும் துறைமுகங்களை (Floating Jetties) அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தத் துறையில் இலங்கைக்கு முன் அனுபவம் இல்லாததால், அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த தொழில்நுட்ப மதிப்பீட்டை நடத்துமாறும், அதற்குத் தேவையான நிபுணத்துவத்தை வழங்குமாறும் கோரினார்.
நீர்த்தாவர திசு வளர்ப்பு: நீர்ப்பூண்டுகளின் நுண் பெருக்கம் (Micro-propagation) தொடர்பில் நெதர்லாந்து உலகிலேயே முன்னணி நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பதால், அந்த அறிவை இங்குள்ள NARA (நாரா), NAQDA (நக்ரா) மற்றும் தனியார் துறைக்கும் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு நிபுணரின் உதவியை வழங்குமாறு அமைச்சின் செயலாளர் கோரினார். இந்தத் துறை குறித்து தான் அறிந்துகொண்டமைக்கு நன்றி தெரிவித்த துணைத் தூதுவர் ரட்ஜன்ஸ், தமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடி அறிவைப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்திற்கு உதவுவதாக உறுதியளித்தார்.
இரு தரப்பிற்கும் இடையிலான இந்த கலந்துரையாடல் மிகவும் சுமூகமாக நிறைவடைந்ததுடன், முன்மொழியப்பட்ட துறைகளில் எதிர்காலத்தில் நெருக்கமாக இணைந்து செயற்பட இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.