கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கும்புர, கல்கந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணும் ஒரு யாசகர் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த இரண்டு கொலைகளுக்கும் பின்னணியில் 30 வயது இளைஞனும், அவருடன் நெருக்கமாகப் பழகிய 73 வயது முதியவர் ஒருவரும் இருப்பதாகக் காவல்துறை தரப்புத் தெரிவிக்கிறது.
முன்னாள் சிறைச்சாலை அதிகாரியான அந்த 73 வயது முதியவர், ஏற்கனவே 15 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 2019ஆம் ஆண்டில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இளைஞன் குறித்த முதியவரை “தந்தை” என்றே அழைத்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
யாசகப் பெண்ணிடம் ஒரு இலட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பித் தருமாறு அவர் நச்சரித்ததால் அவரைக் கொன்றதாகவும் அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், அந்த இளைஞன் ஒருவித மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்பதால், அவர் அளிக்கும் வாக்குமூலங்களின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கொல்லப்பட்ட பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகளில் கண்டிக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்
