சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி வயது மூப்பு காரணமாக மறைந்தார். அவரது 7-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதன் பகுதியாக திமுக சென்னை மாவட்டம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவர், ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பேரணி தொடங்கியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்செல்ல அவரது பின்னால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கருணாநிதியின் புகைப்படம் ஏந்திய பதாகை உள்ளிட்டவற்றை ஏந்தியபடி சென்றனர்.
பேரணியானது, மெரினா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்குள்ள முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.,க்கள், சுதர்சனம், தாயகம் கவி உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத் தலைவர் பூச்சி முருகன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கலைஞர் முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. பெரியாரும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழகத்தைக் காத்து முன்னேற்ற உறுதியேற்று, அவரது ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழகம் முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.