அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்காகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் மூன் நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் எமது தேசிய நோக்கு, அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதாகும்.
அது சாத்தியமாவதற்கு எமது நாட்டிற்கு வித்தியாசமான தலைவர்களும் வித்தியாசமான நாட்டு மக்களும் தேவைப்படுகின்றனர். அந்த மக்கள் இந்த நாட்டின் சுற்றுச்சூழல், விலங்குகள், கடல்கள் மீது மிகுந்த அன்பைக் காட்டும் உணர்வு மிக்க மனிதர்களாக இருக்க வேண்டும்.
அந்த வித்தியாசமான அல்லது மாற்றம் கண்ட மக்களை உருவாக்க, தேசிய மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்ட கலை மற்றும் கலாசாரத் துறையில் பலமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் முடியும் என நாம் நம்புகிறோம்.
இந்த அருங்காட்சியகம் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறி, அதன் மூலம் பேராதனை தாவரவியல் பூங்காவின் சுற்றுலா மதிப்பு மேலும் வளர்ச்சி பெற வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்’ எதிர்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறார்களையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் விசேட இலக்காகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, பிரதி அமைச்சரகளான அன்டன் ஜயக்கொடி, ஹன்சக விஜேமுனி, , மற்றும் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளர்; உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
…..
பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் 200 வருட பாரம்பரியம் மிக்க தாவரவியல் வரலாற்றை நினைவுகூரும் வகையில்,இந்த மூன் நினைவுத் தாவரவியல் அருங்காட்சியகம், ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும் இந்தத் தாவரவியல் அருங்காட்சியகத்தின் மூலம், விசேட தாவரங்கள், தாவர மாதிரிகள், பொருளாதாரப் பயிர்கள், தாவர வரலாறு மற்றும் அதன் பயணப் பாதை உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு தாவரவியல் அருங்காட்சியகங்களுக்கு இணையாக உள்நாட்டு மக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு அறிவைப் பெற்றுக்கொடுப்பதும், இயல்நிலை பாதுகாப்பு உட்பட தாவர அமைப்பைப் பற்றிய பரந்த அறிவை மக்கள் மத்தியில் சமூகமயமாக்குவதுமே பிரதான நோக்கமாகும்.