களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களப்பணிகள் முறையாக இடம்பெறாவிட்டால் சுகாதார சேவையில் எத்தகைய அபிவிருத்தியை மேற்கொண்டாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை குடும்ப நல சுகாதார அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகளின் தொழில்முறை பிரச்சினைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
அவை குறித்து கவனம் செலுத்தி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.