காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது.
இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன.
காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
யுத்ததிற்கு முன்னதாக காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள மக்களை காசாவில் உள்ள கான் யூனிஸின் நியமிக்கப்பட்ட கடலோரப் பகுதிக்கு செல்லுமாறும் அவ்வாறு அங்கு தப்பி செல்லும் மக்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று முன்தினம் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த வண்ணம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.