“இது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட கிழக்கு மாகாண இன அழிப்பே இது. வீதியில் நிற்கின்றோம். நீதி தேவதைக்கு கண் இல்லை, அதுபோலத்தான் இந்த விவகாரமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 35 வருடங்களாக உள்ளக பொறிமுறை அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறாத நீதி இனியும் கிடைக்காது. ஆகவேதான் நாங்கள் சர்வதேச நீதிபொறிமுறை ஊடாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.”
35 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி செப்டெம்பர் 5, 2025ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் நினைவேந்தலில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலராஜ் அமலநாயகி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்க கிடைத்த சுமார் 17,000 முறைப்பாடுகளில் மீதமுள்ள 10,000 முறைப்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பதற்கான ஒரு முன்மொழிவை அமைச்சரவை இந்த வாரம் அங்கீகரித்தது.
“அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”
மூன்றரை தசாப்தங்களாக தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடி வரும் ஒரு தாயின் கதியை, அமல்ராஜ் அமலநாயகி பிரதேச ஊடகவியலாளர்களுக்கு பின்வருமாறு விளக்கினார்:
“போன வருடம் நினைவேந்தலுக்கு வந்த அம்மாவால் இந்த வருடம் நினைவேந்தலுக்கு வரமுடியாமல் படுக்கையில் இருக்கின்றார். தன்னுடைய மகனுக்காக கண்ணீர் வடித்த கண்ணீர் வடித்து படுக்கையில் கிடக்கின்றார். தன்னுடைய மகனுக்கு நீதி கேட் முடியாத நிலைமையில் அந்த தாய் இருக்கின்றார்.”
வெள்ளைக் கொடி
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறூமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்கள் கொம்மாதுறை இராணுவ முகாமில் இருந்து வந்தவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேடுதல் மற்றும் அழிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வாழைச்சேனை இராணுவ முகாமின் துருப்புக்கள் தாக்குதல் நடத்தியமையால், வந்தாறுமூலை, சுங்கன்கேணி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து தப்பி வந்தவர்கள் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். பாதுகாப்பு அளித்த பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகத்தின் முன் வெள்ளைக் கொடிகளை ஏற்றியிருந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய, அன்றைய தினம் காலை 9 மணியளவில் அங்கு வந்த இராணுவத்தினர், தஞ்சமடைந்திருந்த அனைவரையும் வரிசையாக நிறுத்தி, தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை, இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் மட்டக்களப்பு சத்துருகொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவத்தினர் தாக்கி மேலும் பல கிராம மக்களை கடத்திச் சென்றனர். இவர்களில் எவரும் திரும்பி வரவில்லை.
கெப்டன் முனாஸ் மற்றும் கெப்டன் ரிச்சர்ட் டயஸ்
கைதிகளை அழைத்துச் செல்ல கெப்டன் முனாஸ் எனப்படும் இராணுவ அதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்தனர். கெப்டன் முனாஸ், கெப்டன் ரிச்சர்ட் டயஸ் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் அருட்தந்தை ஹரி மில்லர் 1993ஆம் ஆண்டு ‘ஹிரு’ பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முதலாவது நிர்வாகத்தின் போது நியமித்த “கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களில்” ஒன்றான வடக்கு, கிழக்கு ஆணைக்குழு, வந்தாறூமூலை படுகொலை தொடர்பான தகவல்களை வெளியிட்டது.
கிருஷ்ணபிள்ளை பாலகிட்ணர் தலைமையிலான மூவரடங்கிய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களுக்கு, கெப்டன் முனாஸ், கெப்டன் பாலித மற்றும் கெப்டன் குணரத்ன ஆகியோரே பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் ஆயுதமேந்திய கும்பலை சேர்ந்த மேஜர் மஜீத் மற்றும் மேஜர் மொஹான் ஆகிய இரு தலைவர்களும் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஆணைக்குழு பதிவு செய்திருந்தது.
முன்னாள் இராணுவத் தளபதி
1990 செப்டெம்பர் 8ஆம் திகதி முகாமுக்கு வந்த அப்போதைய இராணுவத் தளபதி ஜெரி டி சில்வா, கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக, சாட்சிகள் ஆணைக்குழுவிடம் கூறியிருந்தன.
அந்த ‘குற்றவாளிகள்’ தொடர்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருக்கவில்லை.
எனினும், அந்தந்த ஆணைக்குழுக்களின் செயலாளராக இருந்த எம்.சி.எம். இக்பால், கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்டதாக ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேலதிக சட்ட விசாரணை நடத்தப்படக்கூடாது என உயர் அரசியல் அதிகாரம் உத்தரவிட்டதாக பின்நாட்களில் கூறியிருந்தார்.