கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை | B.L.Santhosh Lead TN BJP Leaders Meeting on September 16th at Kamalalayam

சென்னை: தமிழக பாஜக மற்றும் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வரும் 16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், தினகரன் வெளியேறிய நிலையில், அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, கூட்டணி ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அழைத்து தேசிய தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்து கமலாலயத்தில் பாஜக தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதன்படி “சிந்தன் பைதக்” எனப்படும் ”சிந்தனை ஆய்வுக்கூட்டம்” செப்.16-ம் தேதி கமலாலயத்தில் நடக்கிறது. இதற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், வானதி, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில், கட்சி மற்றும் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply