கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் | Gas Tanker Lorry Owners Association Strike: Risk of Gas Shortage

நாமக்கல்: கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியத அடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேசன் (பிபிசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ரேசன் (ஃஹெச்பிசி) ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்தம் 5 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான கேஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஆயில் நிறுவனங்களுடன் தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதில் உடன்பாடு எதுவும் ஏற்பட்டவில்லை.

இச்சூழலில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்கழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்திற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களி ல் இருந்து கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடும் கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்த கால அளவு 5 ஆண்டுகளாகும். புதிய ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி சுமார் 700-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

இதனால் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தங்கள் வண்டிகளை ஓட்டாமல் நிறுத்தி வைத்துள்ளனர். பல டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங்களுக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல் நகருக்கு வருகை தந்து கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2016 ஆண்டுக்கு மேல் மாடல் உள்ள அனைத்து கேஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து, 5,000 கேஸ் டேங்கர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். தகுதியான அனைத்து கேஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு உத்திரவு வழங்கும் வரை காலவரையற்ற ஸ்டிரைக் போராட்டம் தொடரும்” என்று சேர்மன் சண்முகப்பா கூறினார்.

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply