கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன்; பெற்றோர் மீது பலி போடும் நிர்வாகம்?

இலங்கை தலைநகரில் உள்ள பிரபல விடுதியில் நடந்த விருந்தின் போது, நீரில் மூழ்கிய பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் ஆறு நாட்களாக சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், விபத்துக்கு பெற்றோர் மீது பழி சுமத்த குறித்த விடுதி முயற்சிப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மொரட்டுவையில் உள்ள புனித தோமையர் கல்லூரியில் கற்கும் 8 வயது சிறுவனின் விபத்து கொழும்பு நீச்சல் கழகத்தின் (Colombo Swimming Club) அலட்சியத்தால் ஏற்பட்டதாக, வெலிகம நகர சபையின் முன்னாள் மேயரும் சமூக ஊடக ஆர்வலருமான ரெஹான் ஜெயவிக்ரம தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவில்  குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்காக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் மற்றும் கழகத்தின் விதிகளைப் பின்பற்றத் தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக செப்டெம்பர் 28, 2025 அன்று நடந்த விபத்து தொடர்பாக அதன் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அளித்த அறிக்கையில், கொழும்பு நீச்சல் கழகம் குறிப்பிட்டுள்ளது.

ஓர் உயிர்காப்பாளர் நியமிக்கப்பட்டாலும், ஒவ்வொரு பிள்ளையின் மீதும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கும் அதே அளவிலான பாதுகாப்பை அது வழங்காது என்பதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நீச்சல் தடாகம் பகுதியில் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

கொழும்பு நீச்சல் கழகத்தின் அறிவிப்பை மிகவும் அவமானகரமான மற்றும் தவறான அறிக்கை என கண்டிக்கும் சமூக ஊடக ஆர்வலர் ரெஹான் ஜெயவிக்ரம, அதை உறுதிப்படுத்த தனது எக்ஸ் தளத்தில் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு உயிர்காப்பாளர் பல பிள்ளைகளை மேற்பார்வையிட இயலாது என்ற அடிப்படையில் கொழும்பு நீச்சல் கழகத்தின் முன்னாள் நிர்வாகக் குழு இதுபோன்ற விருந்துகளை நடத்துவதை நிறுத்தியதாகவும், தற்போதைய நிர்வாகம் இதைப் புறக்கணித்து அதை அனுமதித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பெற்றோரிடம் தங்கள் பிள்ளைகளை நீச்சல் குளத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லுமாறு இந்த விருந்தை அனுமதித்த கொழும்பு நீச்சல் கழகம் கோரவில்லை எனவும், எட்டு வயது சிறுவன் எப்படி ஒரு நீச்சல் தடாக விருந்தை (pool party) நடத்த அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

சம்பவத்தின் போது உயிர்காக்கும் அதிகாரி சம்பவ இடத்தில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் முன்னாள் மேயர், இது பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும்,  ‘சில துவாளைகளை எடுக்கச் சென்றேன்’ என உயிர்காக்கும் அதிகாரி சமாளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட முதலுதவி நீச்சல் கழக ஊழியர்களால் வழங்கப்படவில்லை, மாறாக விருந்தில் கலந்து கொண்ட ஒரு வைத்தியரால் வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் கழகம் சரியான நேரத்தில் அம்பியுலன்ஸை அழைக்கத் தவறியுள்ளதாகவும், அதனால்தான் பெற்றோரில் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஓட வேண்டியிருந்தது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பார்க்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், கொழும்பு நீச்சல் கழகம் வாகன நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்ட கமராக்கள் செயற்படவில்லை எனவும், நீச்சல் குளத்தின் அருகில் பொருத்தப்பட்ட கமராக்கள் “உறுப்பினர்கள் செய்த தனியுரிமை முறைப்பாடுகள் காரணமாக” அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சிறுவனை நீச்சல் கழகம் வைத்தியசாலைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், உடற்பயிற்சி நிலையத்தில் இருந்த ஒருவரே சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரம குறிப்பிடுகின்றார்.

சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரிக்க கொழும்பு நீச்சல் கழகம் பெற்றோரை ஒரு முறையேனும் தொடர்புகொள்ளவில்லை எனவும், சிறுவன் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலை ஐந்து நிமிட பயண தூரத்தில்  இருந்தபோதிலும், சிறுவனை சென்று பார்க்க வேண்டுமென்ற  ‘அடிப்படை கண்ணியம்’ கூட கொழும்பு நீச்சல் கழகத்திற்கு இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

காயமடைந்த மாணவர் கற்கும் மொரட்டுவை புனித தோமையன் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரெஹான் ஜெயவிக்ரம, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply