கோவை: கோவையில் நடந்த சிஐடியு தொழிற்சங்க மாநாட்டில் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவையில் தொடங்கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
இரண்டாம் நாள் நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில், மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன், அகில இந்தியதுணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், விவசாயிகள் சங்கத் தலைவர் டி.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.சின்னதுரை, அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோர் பேசினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை உயர்த்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில், 41 பேர் கொண்ட சிஐடியு புதிய மாநில நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது.
மாநிலத் தலைவராக ஜி. சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.ராஜேந்திரன், உதவி பொதுச் செயலாளர்களாக வி.குமார், கே.திருச்செல்வன், கே.ஆறுமுகநாயினர், இ.முத்துக்குமார், மாநிலத் துணைத் தலைவர்களாக அ.சவுந்தரராசன், மாலதி சிட்டிபாபு, கே.விஜயன், எம்.சந்திரன்,பி.கருப்பையன், டிஉதயகுமார், ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜானகிராமன், எம்.மகாலஷ்மி, எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட 17 பேரும், செயலாளர்களாக கே.சி.கோபிகுமார், கே.ரங்கராஜ், பி.என்.தேவா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி. எம்.தனலட்சுமி உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, நேற்று மாலை நடந்த பேரணியில் சிஐடியு நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். கோவை சிவானந்தா காலனியில் பேரணி நிறைவடைந்தது.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் கே. ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென், தேசிய செயலாளர் ஆர்.கருமலையான் உள்ளிட்டோர் பேசினர்.சிஐடியு தொழிற்சங்க மாநில மாநாட்டு நிறைவையொட்டி கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர்.
