சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ரூ.12-க்கு விற்கப்பட்ட தக்காளி, ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து ஏறுமுகமாக இருந்தது. ஜூலை முதல் வாரத்தில் கிலோ ரூ.20 ஆக உயர்ந்திருந்தது. 2-வது வாரத்தில் ரூ.25 ஆக உயர்ந்த நிலையில், இறுதி வாரத்தில் நேற்று கிலோ ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.40-க்கும், சிறுகடைகளில் ரூ.45-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மற்ற காய்கறிகளான கேரட் ரூ.45, பீன்ஸ், வெண்டைக்காய், சாம்பார் வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.30, பாகற்காய் ரூ.20, வெங்காயம் ரூ.16, முருங்கைக்காய், பீட்ரூட், நூக்கல் தலா ரூ.15, கத்தரிக்காய், முள்ளங்கி தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மேலும் வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.