கொழும்பு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேற்று காலை கொழும்பு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் வாகனத்தை வெளியேற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலைச்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நீதிமன்ற வளாகத்துக்குள் வந்ததன் காரணமாக, பொலிஸ் அதிகாரி சட்டத்தரணியிடம் பேருந்து உள்ளே நுழையும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்குதலைக் கண்டித்து அறிக்கையை வெளியிட்டது, எனினும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தினை உன்னிப்பாக அவதானத்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவத்தைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.