மேல் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாலும் சந்தேகநபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு முடிவடையும் எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவை வழங்குமாறும், அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதால் அதுவரை சந்தேகநபரைத் தடுத்து வைக்க உத்தரவிடுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாகவும், மேலதிக தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை இன்றைய தினமே சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
எவ்வாறாயினும், விடயங்களை ஆராய்ந்த வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படும் இரசாயன பொருட்கள் மற்றும் ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த வழக்கின் கீழ் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
