கிங்ஸ்டன், சபினா பார்க்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் (Andre Russell) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
தனது சொந்த ஊரில் தனது பிரியாவிடை ஆட்டத்தை விளையாடிய ரஸ்ஸல் மேற்கிந்திய தீவுகள் அணி 14 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 98 ஓட்டங்களை எடுத்திருந்த போது களமிறங்கினார்.
அவரது இன்னிங்ஸில் 15 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய ரஸ்ஸலுக்கு, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது, அவரது சக வீரர்களும் அவுஸ்திரேலிய வீரர்களும் மரியாதை மரியாதை அளித்தனர்.
இதன் வீடியோவை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றியது.
2010 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கிய ரஸ்ஸல், ஒரே ஒரு சிவப்பு பந்து ஆட்டத்தில் மட்டும் விளையாடினார்.
ஆனால், 56 ஒருநாள் போட்டிகளிலும் 86 டி20 போட்டிகளிலும் ஆண்கள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போது தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
மொத்தம் 2056 ஓட்டங்கள் மற்றும் 131 விக்கெட்டுகளுடன், ரஸ்ஸல் மேற்கிந்திய தீவுகளுக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு சிறந்த சொத்தாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.