சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்மொழிய ஒரு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திரங்களைப் பெறும்போது விண்ணப்பதாரர்களின் வயது மற்றும் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடுத்தர வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்ற காலத்திற்கு செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இது ஒரு முடிவு அல்ல, ஒரு திட்டம் மட்டுமே என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், கனரக வாகன சாரதிகளுக்கு இது பொருந்தாது என்றும், கனரக வாகன சாரதிகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் தங்கள் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு அவசியமான தேசிய போக்குவரத்து மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உடற்தகுதி சான்றிதழை ஒன்லைன் டிஜிட்டல் அமைப்பு மூலம் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உடற்தகுதி சான்றிதழை அச்சிடுவதற்கு அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் ரூபாய் செலவிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.