சிட்னி துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 15ஆக உயர்வு; தாக்குதலாளர்கள் தந்தை–மகன் என அடையாளம்


சிட்னியின் பொண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

நேற்று (14) நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பதும் உறுதியாகியுள்ளது. 50 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அவரது 24 வயதுடைய மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

யூத சமூகத்தின் கொண்டாட்ட நிகழ்வொன்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இச்சம்பவத்தில் 29க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனேஸ் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். இது “தீய யூத-எதிர்ப்பு தீவிரவாதச் செயல்” என அவர் கூறியதுடன், இத்தகைய வன்முறைக்கும் வெறுப்புச் செயல்களுக்கும் நாட்டில் இடமில்லை என்று வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதாக நடைபெறுவதால், இந்த நிகழ்வு மேலும் அதிர்ச்சியளிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலாளர்களில் ஒருவருடன் நேரடியாக மோதிச் துப்பாக்கியைப் பறித்த நபரின் துணிச்சலையும் அவர் பாராட்டி, அவரது செயல் பல உயிர்களை காப்பாற்றியதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் யூத-எதிர்ப்பு தீவிரவாதச் செயலாக இதனை சுட்டிக்காட்டி, இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், துப்பாக்கிச் சத்தம் முதலில் வானவேடிக்கை போலக் கேட்டதாகவும், பின்னர் மக்கள் கட்டுப்பாடின்றி பின்வாசல் வழியாக வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட தாக்குதலாளருடன் தொடர்புடைய சில தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு முன்பே தெரிந்திருந்தாலும், அவர் உடனடி அச்சுறுத்தலாக கருதப்படவில்லை என பொலிஸ் ஆணையாளர் விளக்கமளித்தார். சமூக ஊடகங்களில் பரவும் பெயர்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply