போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவருக்கு போதைப்பொருள் அடங்கிய சிறிய பொதியொன்றினை வழங்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைக்கைதியின் மனைவியை கெக்கிராவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று (30) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்னேவ, ஹுரிகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 480 மில்லி கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் போதைப்பொருள் கலந்து தயாரிக்கப்பட்ட 300 கிராம் புகையிலை தூள் என்பவற்றினை கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள குறித்த சந்தேகநபரை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மேலும் சில சிறைக்கைதிகளுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு கெக்கிராவை நீதிமன்ற சிறைக் கூடத்திற்கு அருகில் அமர வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இதன் போது அங்கு வந்த அவரது மனைவி பொட்டலமொன்றை வழங்கியுள்ளதை கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் அவதானித்ததை அடுத்து, குறித்த அதிகாரி பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.